சுவிட்சர்லாந்தின் சூரிச் மாகாண இளைஞர் ஒருவர் பின்லாந்து நாட்டு சிறுமியின் அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு அவரது தற்கொலைக்கு காரணமாகியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் கடந்த 6 மாதங்களாக விசாரணை கைதியாக சிறையில் இருந்து வருகிறார்.
கடந்த 2016 ஆம் ஆண்டு சமூக வலைதளம் வாயிலாக பின்லாந்து நாட்டவரான 13 வயது சிறுமியுடன் 28 வயதான சூரிச் இளைஞருக்கு அறிமுகம் கிடைத்துள்ளது.
துவக்கத்தில் இருவரும் பொதுவான விடயங்களையே சேட் மூலம் பகிர்ந்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் குறித்த இளைஞர் தமது அந்தரங்க புகைப்படங்களை அந்த சிறுமிக்கு அனுப்பி வைத்துள்ளார்.
பதிலுக்கு சிறுமியின் புகைப்படங்களை அந்த இளைஞர் கேட்டு நிர்பந்தித்துள்ளார். ஆனால் அதற்கு சிறுமி மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் சூரிச் இளைஞர் சிறுமியை பேசி மயக்கி விடியோ சேட் செய்ய நிர்பந்தித்துள்ளார். மட்டுமின்றி இளைஞர் கூறுவது போன்று வீடியோவில் நடந்து கொள்ளவும் நிர்பந்தித்துள்ளார்.
சில நாட்கள் கடந்த நிலையில், சிறுமியின் அந்தரங்க வீடியோ மற்றும் புகைப்படங்கள் ஆபாச இணைய தளத்தில் அந்த இளைஞரால் வெளியிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி சிறுமியின் உண்மையான பெயரிலேயே அந்த வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை நீக்க குறித்த இளைஞரிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஆனால் அதற்கு மறுத்துள்ளதுடன், மேலும் புகைப்படங்களை அனுப்பாவிட்டால் பெற்றோரிடம் அந்த புகைப்படங்களை அனுப்பி வைப்பதாகவும் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்துபோன சிறுமி திடீரென்று ஒரு நாள் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட பொலிசார், குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
சிறுமியின் தற்கொலைக்கான காரணம் இதுவரை உறுதியாகாத நிலையில், சிறுமியுடன் ஆபாச சேட் மற்றும் பாலியல் ரீதியாக உணர்வுகளை தூண்டியதாக கூறி வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த இளைஞர் மீதான வழக்கு நிரூபிக்கப்பட்டால் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.