சுவிட்சர்லாந்து நாட்டின் பூகோள அமைப்பின் அடிப்படையில் எந்த நேரத்திலும் பேரழிவு உண்டாக்கும் பூகம்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என சுவிஸின் நில அதிர்வு ஆய்வு மையம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.
பிற ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடுகையில் சுவிட்சர்லாந்து நாடு பேரழிவு பூகம்பம் எந்த நேரத்திலும் எதிர்நோக்கியுள்ள நாடு என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சுவிஸின் பூகோள அமைப்பை 2004ம் ஆண்டிலிருந்து கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ந்து தற்போது ஒரு புதிய ‘நில அதிர்வு அபாயத்திற்குரிய’ பகுதிகளின் வரைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இந்த ஆய்வின் அடிப்படையில், சுவிஸின் வாலைஸ்(Valais) மண்டலம் தான் அதிகளவில் நிலநடுக்கத்திற்கு உள்ளாகும் என ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
இதற்கு அடுத்ததாக பேசல், Graubunden, St. Gallen Rhine பள்ளத்தாக்கு மற்றும் மத்திய சுவிட்சர்லாந்து பகுதிகள் நிலநடுக்கத்தில் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள புதிய வரைப்படத்தில், சிகப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் இருப்பது நிலநடுக்கத்தால் அதிகம் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகள் ஆகும்.
கருஞ்சிகப்பாக உள்ள பகுதியில் அதிக பாதிப்புகள் ஏற்படும். லேசான பச்சை நிறத்தில் உள்ள பகுதிகளில் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் குறைவாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பேசிய நில அதிர்வு ஆராய்ச்சி மைய அதிகாரியான ஸ்டீபன் வைமெர், சுவிஸில் எந்த நேரத்திலும் அல்லது சில வருடங்களுக்கும் பிறகும் கூட மிதமான அல்லது கடுமையான அல்லது மிக பேரழிவை உண்டாக்கும் நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
சுவிஸ் நாட்டில் ஆண்டுக்கு 500 முதல் 800 முறைகள் நில அதிர்வுகள் ஏற்படுகிறது.
உதாரணமாக, பேசில் மண்டலத்தில் 6.6 ரிக்டல் அலகில் நிலநடுக்கம் ஏற்பட்டால், 1,000 முதல் 6,000 பேர் வரை உயிரிழப்பும், 45,000 பேர் வரை பலத்த காயமடையும் நிலையும், 1.6 மில்லியன் மக்கள் வீடு இழக்க நேரிடும் நிலையும், 50 முதல் 140 பில்லியன் பிராங்க் மதிப்பில் மிக மோசமான சேதாரமும் ஏற்படும் என ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.
எனினும், உடனடியாக பேரழிவு நிலநடுக்கம் ஏற்படுவதற்கான எந்தவித உறுதியான ஆதரங்களும் ஆராய்ச்சியாளர்களிடம் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
மிதமான நில அதிர்வு அல்லது கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டால், பொதுமக்கள் http://www.seismo.ethz.ch என்ற இணையத்தளத்தில் ஒவ்வொரு பகுதிகளின் சேதாரத்தை பற்றி அறிந்துகொள்ளலாம் என ஸ்டீபன் தெரிவித்துள்ளார்.