இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நேற்று முன்தினம் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 832 ஆக அதிகரித்துள்ளது.
தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது.
அன்று என்ன நடந்தது?
இந்தோனேசியாவின் வடக்கு பகுதியில் சிறந்த சுற்றுலாத் தலமாக விளங்கும் சுலவேசி தீவு அமைந்துள்ளது. இந்த தீவின் தலைநகரான பலுவில் சுமார் 3.8 லட்சம் மக்கள் உள்ளனர்.
இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் சுனாமி என்பன இடம்பெறுவதனால் கடலை மதிக்குமுகமாக கடல் திருவிழா இடம்பெறுகின்றமை வழக்கமாகும்.
நேற்று முன்தினம் மாலையில் கடற்கரை திருவிழாவை கொண்டாடுவதற்காக பொதுமக்கள் கடற்கரையில் கூடினர்.
இந்த நிலையில் மாலை 3 மணி அளவில் இந்த தீவின் கடல் பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. பின்னர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பலு நகரிலிருந்து 80 கி.மீ. தூரத்தில், 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுகோளில் 7.5 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இதையடுத்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டாலும் சிறிது நேரத்தில் அந்த எச்சரிக்கையும் திரும்பப் பெறப்பட்டது. ஆனால், அந்த எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்ட சிறிது நேரத்தில் பலு நகர கடலோரப் பகுதிகளில் ஆழிப்பேரலைகள் தாக்கின.
சுமார் 3 மீட்டர் உயரத்துக்கு ஆர்ப்பரித்து எழுந்த அலைகள் கரையை த்தாக்கின.
நிலநடுக்கம் காரணமாக பலு நகரில் இருந்த குடியிருப்பு கட்டிடங்கள், ஒரு மசூதி உட்பட பல்வேறு கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஷொப்பிங் மால்கள் உள்ளிட்ட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. முக்கிய பாலம் ஒன்றும் இடிந்து விழுந்தது.
நிலநடுக்கத்தை உணர்ந்த பலர் கட்டிடங்களை விட்டு வெளியில் ஓடிவந்தனர். எனினும், பலர் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.
சுனாமி தாக்கியதில் கடலோர பகுதிகளில் உள்ள வீடுகள், கட்டிடங்கள் சேதமடைந்தன. கடற்கரையில் கூடியிருந்தவர்கள் மற்றும் வீடுகளில் இருந்த பலர் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். அங்கிருந்த வாகனங்களும் இழுத்துச் செல்லப்பட்டன. இதனால் அப்பகுதி அல்லோலகல்லோலப்பட்டது.
கடுமையான யுத்தம் ஒன்று நடந்து முடிந்த பிரதேசமாக பலு நகரம் காணப்படுகிறது. கடற்கரையில் ஏராளமான உடல்கள் கரை ஒதுங்கி வருவதுடன் இதுவரை 832 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் மேலும் பலர் காணாமல் போயுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது