திறைசேரியின் ஆலோசனையின் பிரகாரம் ரயில் கட்டணங்கள் இன்று முதல் 15 வீதத்தால் அதிகரிக்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஆரம்பக் கட்டணத்தில் பயணிக்கும் தூரத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் எனினும் ஆரம்ப கட்டணத்தில் எந்தவித மாற்றமும் இல்லை எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதாவது 3 ஆம் வகுப்புக்காக அறவிடப்பட்ட ஆரம்பக்கட்டணமான 10 ரூபா, 2 ஆம் வகுப்புக்காக அறவிடப்பட்ட 20 ரூபா மற்றும் முதலாம் வகுப்புக்காக அறவிடப்பட்ட 40 ரூபா ஆகியவற்றில் எந்த மாற்றங்களும் இடம்பெறாது. என்றாலும் அடிப்படைக்கட்டணத்தில் இதுவரை பயணித்த தூரம் தற்போது குறைக்கப்பட்டிருக்கின்றது.
இதன் படி , 10 ரூபாவுக்கு பயணிக்க முடியுமாகவிருந்த 9 கிலோ மீற்றர் தூரம் தற்போது 7 கிலோ மீற்றராக குறைக்கப்பட்டுள்ளது. அனுமதிச்சீட்டு கட்டணத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் பருவச்சீட்டு கட்டணத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றபோதும் பருவச்சீட்டுக்காக இதுவரை அறவிடப்பட்டு வந்த வீதத்தில் எந்த மாற்றமும் இடம்பெறாது.
அதன் பிரகாரம் அரச ஊழியர்களின் பருவச்சீட்டுக்காக அறவிடப்படும் கட்டணமானது ஒருமுறை பயணிக்கும் பயணச்சீட்டின் பெறுமதியில் 9 மடங்காகும். தனியார் துறை ஊழியர்களின் பருவச்சீட்டுக்காக அறவிடப்படும் கட்டணமானது ஒருமுறை பயணிக்கும் பயணச்சீட்டின் பெறுமதியில் 24 மடங்காகும்.
திறைசேரி மற்றும் போக்குவரத்து அமைச்சு அனுமதியுடன் இந்த கட்டண திருத்தம் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவிப்பு கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் திகதி வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.