அமெரிக்காவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாகன நெரிசலில் சிக்கிக் கொண்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஐ.நா பொதுச் சபையின் 73வது கூட்டத்தொடரில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி தனது குழுவினருடன் நியூயோர்க் சென்றிருந்தார்.
இதன்போது ஐ.நா தலைமையகத்தில் போதைப்பொருளில் இருந்து உலகை காப்பாற்றிக் கொள்வது தொடர்பில் நடத்தப்பட்ட விசேட மாநாட்டில் ஜனாதிபதி கலந்து கொண்டார்.
இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் பங்கேற்றார்.
மாநாட்டின் பின்னர் கனேடிய பிரதமர் உட்பட பலரை சந்தித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அங்கிருந்து அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு சென்றிருந்தார்.
சிறிது தூரம் செல்லும் போது, ஜனாதிபதி வாகனம் பாரிய போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டது.
இதன்போது என்ன ஒரே நேரத்தில் அனைத்து வாகனங்களும் இப்படியே நிறுத்தப்பட்டுள்ளது என ஜனாதிபதி, பாதுகாப்பு தரப்பினரிடம் கேட்டுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஐ.நா தலைமையத்திற்கு சென்றுள்ளார். இதனால் வீதிகள் மூடப்பட்டுள்ளமையினால் பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீண்ட போக்குவரத்து நெரிசலில் சிக்கிய நிலையிலேயே ஜனாதிபதி தனது அறைக்கு செல்ல நேரிட்டுள்ளதாக குறித்த ஊடகம் மேலும் தெரிவித்துள்ளது.