தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து, ஐ.நா சபையில் பேசினார் என்பதற்காக நாடு திரும்பியதும் விமான நிலையத்திலேயே வைத்து கைது செய்யப்பட்டார்.
இதன்பின்னர் கடந்த ஓகஸ்ட் 11 ஆம் திகதி முதல் திருமுருகன் காந்தி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
50 நாட்களுக்கு மேல் சிறையில் உள்ள திருமுருகன் காந்திக்கு நேற்று காலை வயிற்றுப்போக்கு, மயக்கம், மூச்சுத் திணறல் ஏற்பட்டது.
உடனடியாக பரிசோதிக்கப்பட்டதில் அவருடைய உணவு குழாயில் பிரச்சினை இருப்பது தெரியவந்தது.
இதனால் பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் அடுக்கம்பாறை அரச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு திருமுருகன் காந்தியை ஐ.எம்.சி.யு. பிரிவில் அனுமதித்து வைத்தியர்கள் தீவிரமாக சிகிச்சையளித்தனர்.
இன்று 2 ஆவது நாளாகவும் திருமுருகன் காந்திக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஸ்கேன் எடுத்து பார்த்ததில் வயிற்றில் புண் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் மருத்துவக்குழு ஒன்று திருமுருகன் காந்தி உடல்நிலையை பரிசோதித்து கொண்டே வருகின்றது.
இந்த நிலையில், சிறையில் பாம்புகள், புழுப் பூச்சிகள் நிறைந்த பாழடைந்த தனியறையில் திருமுருகன் காந்தி அடைக்கப்பட்டுள்ளதாகவும், சுகாதாரமான உணவு வழங்கப்படாததால் தான் உடல்நிலை மோசமாகி விட்டதாக மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்ட தலைவர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்