“இலக்கியம் என்பது மக்களின் மாளிகை. அதைப் பிரச்சாரம் என்ற தீபத்தால் அழகுபடுத்துங்கள். இந்தக் குடியிருப்புகளில் உள்ள இருளை அகற்றுங்கள்” என்று பிரச்சார இயக்கத் தோழர்கள் நிதானமாக நமக்கு அறிவுறுத்துகிறார்கள் .
இந்தச் சண்டை எப்போதும் வளர்ந்துகொண்டுதான் வருகிறது; இதைப் பற்றி நமது அபிப்பிராயத்தையும் சொல்லி வைப்போமே! மனிதன் தன் கருத்தைத் தெரிவிக்க எண்ணியபோதே பிரச்சாரகன் ஆகிவிடுகிறான் என்பது அறிஞர்கள் ஒப்புக்கொண்ட உண்மை.
“காலையில் எழுந்து கை, கால்களைச் சுத்தம் செய்துகடவுளை வணங்கு” என்று சிறுவன் ஒருவன் தன் பாடப்புத்தகத்தில் உள்ள வரிகளை திருப்பித் திருப்பிப் படிக்கிறான்.
பையனுடைய முதல் அனுபவம் இப்படிப்பட்டதல்ல.காலையில் எழுந்துகை, கால்களைச் சுத்தம் செய்திருப்பான்.
அதற்குப் பின்னால் ‘கடவுளை வணங்க வேண்டும்’ என்ற எண்ணம் இந்தப் புத்தகத்தைப் படித்த பிறகுதான்பையன் உள்ளத்தில் அரும்புவிடத் தொடங்குகின்றது.
ஒரு காரியத்தைச் செய்ய வைப்பதற்காக மக்களிடம் அதைப் பற்றி எடுத்துச் சொல்லுகிறோமே அதுதான் பிரச்சாரம்.
எந்தக் கருத்தை எடுத்துக் கொண்டாலும் அதுபிரச்சாரமாக இருக்கிறதே தவிர, வேறு உருவத்தில் இருப்பதாக நமக்குத் தெரியவில்லை.
தேவார, திருவாசகங்கள் பாடியவர்களும் ஆண்டவனின் அடியார்கள் என்று ஆராதிக்கப் பெற்றவர்களும் தங்கள் முழு பிரச்சார பலத்தையும் உபயோகித்தவர்களே என்பதை யாரும் மறுக்க முடியாது.
தெய்வ லட்சணங்களை மக்கள் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை என்று கருதிய அடியார்கள் தொண்டைவரை ஆண்டவனின் குணங்களைப் பற்றி ஆலாபனம் செய்திருக்கிறார்களே அவைகள் பிரச்சாரம் அல்லவா? சமயம் நேர்ந்த போதெல்லாம் பிற மதத்தவர்களைத் தாக்கியே பாடிய சிலசைவ சமயச்சாரியார்களின் பாடல்கள் பிரச்சாரப் பாடல்கள் அல்லவா? சமணசமயத்தவர்களை குண்டர்கள், தடியர்கள், மடையர்கள் என்றெல்லாம் மக்களிடத்திலே அநியாயமாக அறிமுகப்படுத்தி வைக்க ஒற்றைக்காலில் நின்றார்களே, அதெல்லாம் பிரச்சாரம் அல்லவா?
அருணகிரிநாதரிலிருந்து அழுகுணிச் சித்தர் வரையில் தங்கள் அனுபவங்களையும் கருத்துக்களையும் மக்களிடம் பிரச்சாரந்தானே செய்திருக்கிறார்கள் ? “நட்டகல்லைத் தெய்வமென்றுநாலுபுஷ்பம் சாத்தியே சுற்றிவந்துமொணமொணென்று சொல்லு மந்த்ரம் ஏதடா?” என்று அதட்டிக் கேட்ட சித்தர் பதிகம் பிரச்சாரத்தின் உச்சி ஏணி அல்லவா? “கூழானாலும் குளித்துக் குடி” “கந்தையானாலும் கசக்கிக் கட்டு” இவைகளெல்லாம் குழந்தை இலக்கியத்தின் ஒரு பகுதி! பிரச்சாரம்! மனிதன் தன் கருத்தை பேச்சு உருவில், பாடல் உருவில், பாவனை உருவில் பலப்பலவிதமாக வெளியிடுகிறான்.
கலை உருவில் அவன் தன் கருத்தை வெளியிடும் போது அது இலக்கியமாகிறது. அப்படியென்றால் தன் கருத்துப் பிரச்சாரத்தை இலக்கிய உருவில் வெளியிட்டிருக்கிறான் என்றுதான் அர்த்தம்.
அதைப் பிரச்சார இலக்கியம் என்று சொல்வதை யாரும் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்! ஆண்டவனைப் பற்றியதாக இருந்தாலும் சரி, அக்பரின் அரசாட்சியைப் பற்றியதாக இருந்தாலும் சரி – யாவும் பிரச்சாரமே என்பதில் இரண்டு கட்சிகட்டுவது சப்பைக்கட்டாகவே முடியும்.
ஆனால், இந்தப் பிரச்சாரம் இருக்கிறதே, இது யாருக்காகச் செய்யப்படுகிறது? நல்ல நோக்கத்திற்கா? தீய நோக்கத்திற்கா? என்பதில்தான் இரண்டு கட்சிகள் உண்டு.
இருக்கத்தான் செய்யும். ‘இலக்கியத்தில் பிரச்சாரமா? குடிமுழுகிவிடுமே’ என்று இலக்கிய நண்பர்கள் சங்கம் ஏன் பதறுகிறது? அது எதை இன்றைக்குப் பிரச்சார இலக்கியம் இல்லை என்று ஒப்புக் கொள்கிறது என்று கேட்டால் ஒன்று வாழ்க்கைக்கு சம்பந்தப்படாத கதையாய் இருக்க வேண்டும்.
அல்லது வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட கதையாக இருந்தாலும் அதில் தனிமனித வாழ்க்கையின் சுமையை அவன் தலையிலேயே சுமத்திவிட்டு வெறும் ஓவியத்தைப் போல் நிகழ்ச்சிகளை சித்தரித்துக் கொண்டே போகவேண்டும்.
எங்கேயும் தப்பித்தவறி, நிகழ்ச்சிகளிலிருந்து புலப்படும் உண்மைகளை, குணா குணங்களை, காரணங்களை வற்புறுத்திச் சொல்லி விடக்கூடாது. வந்தது மோசம்.
உடனே “பிரச்சார இலக்கியமையா பிரச்சார இலக்கியம்” என்று கூப்பாடு போடத் தொடங்கிவிடுவார்கள்.
கந்தன் ஒரு ஏழை. அவன் ஒருஆலையில் வேலை செய்து கொண்டிருந்தான். அவனுக்கு மாதம் இருபது ரூபாய் சம்பளம்.
அதில் மீத்து வைப்பது கடினம் என்றாலும் கெட்டிக்காரியான அவன் மனைவி தன் வயிற்றைக் கட்டியேனும் குடும்பத்திற்கென்று நாலுகாசு சேர்த்து வைப்பாள்.இப்படி கதை ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால், நமது சிந்தனை, ஆலையையும் கந்தனின் கடினமான வேலையையும் அவனுக்குக் கிடைக்கும் குறைந்த சம்பளத்தையும், அவன் மனைவி குடும்ப தற்காப்புக்காகத் தன் வயிற்றைக்கட்டி வாயைக்கட்டிப் புழுவாக நெளிவதையும் தகுந்த போஷனை இல்லாமல் நாளுக்கு நாள் அந்தக் குடும்பம் நலிந்து வருவதையும் சிந்திக்கக் கூடாது.
“இலக்கியப் பொருளாக எடுத்துக் கொள்ளத் தக்கவர்கள் கேவலம் கந்தனும் குப்பனுந்தானா? எல்லை இல்லாத குணங்களின் இருப்பிடமாகவும் சர்வ வியாபகனாகவும் வீற்றிருக்கும் எம்பெருமானாகிய ஸ்ரீமந்நாராயண மூர்த்தியின் திரு அவதாரங்களை அல்லவா காவியமாக செய்யவேண்டும்? மானுஷ சக்தியை மீறிய அந்தத் தெய்வீக சக்தியைப் பாடி விட்டால் போதுமே. அவ்விலக்கியம் உலகுள்ள நாள் வரையில் அழியாதே. அதுவல்லவா சிரஞ்சீவி இலக்கியம்” என்று பஞ்சணையில் படுத்துக்கொண்டு மார்பில் தடவியிருக்கும் சந்தனத்தின் மணத்தை நுகர்ந்தவாறு பக்திப் பரவசத்துடன் திருவாய் மலர்ந்தருளாநிற்கும்.
இந்த இலக்கிய சங்கத்தையும் , இலக்கிய புரபஸர்க ளையும் பார்த்து , மாக்ஸிம் கார்க்கியும், மாயக்காவ்ஸ்கி யும், விக்தர்`ஹியூகோவும்,ரோமன் ரோலண்டும், ஹரீந்திரநாத்தும், முல்க்ராஜ் ஆனந்தும், பாரதியாரும், புதுமை எழுத்தாளர்களும் ‘இடி இடி’ என்று சிரிக்கிறார்கள். வாழ்க பிரச்சார இலக்கிய மேதைகள் என்று நாம் அவர்களுக்கு வாழ்த்துக் கூறுவோம்.