பிரதமர் ஆகுவதற்காக வாய்ப்பு ஒருமுறை கிடைத்தும் அதனை முறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதி உதறித் தள்ளியதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் அயனாவரத்தில் இடம்பெற்ற ‘கலைஞருக்கு தோழமை வணக்கம்’ கூட்டத்தில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்திய வரலாற்றை கருணாநிதியின் பெயரைக் குறிப்பிடாமல் எழுத முடியாது எனக் குறிப்பிட்ட அவர், அந்த அளவுக்கு இந்திய அளவில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழகத்தில் கடந்த 100 ஆண்டுகளில் சிந்தனை மாற்றங்கள் செய்தவர்கள் பெரியார், அண்ணா, கருணாநிதி. 50 ஆண்டுகளாக தமிழர்களுக்காக எழுதியும், பேசியும் வந்தவர் கருணாநிதி தான். அவருக்கு நிகரான தலைவராக யாரையும் குறிப்பிட முடியாது.
அம்பேத்கர், டாவின்ஸி போல பன்முக ஆற்றல் மிக்கவர். அவரது ‘பரா சக்தி’ படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ராஜாஜி குரல் கொடுத்தார். ஆனால் அப்போது தடை விதிக்கப்படவில்லை.
அந்தப் படத்தின் வசனத்தை அனைவரும் மனப்பாடமாகச் சொல்வார்கள். அதே படம் இப்போது வெளிவந்தால் படத்துக்கு தடையே விதித்திருப்பார்கள் என்று சொல்லும் அளவிலான ஆட்சிகள் தான் தற்போது மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெற்று வருகின்றன.
நாவல்கள், கடிதங்கள், அறிக்கைகள், கவிதைகள் என தமிழ் மக்களுக்காக அவருடைய 80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 78 ஆண்டுகள் தொடர்ந்து எழுதியுள்ளார்.
எதிர்காலத்தில் கருணாநிதியின் எழுத்துக்களை ஆய்வு செய்பவர்கள் இதையெல்லாம் ஒரே மனிதரா எழுதினார் என்று வியப்பார்கள். அதுவும் முதலமைச்சராக 5 முறைக்கு மேல் இருந்து கொண்டு எப்படி இதையெல்லாம் எழுதினார் என்று ஆச்சரியப்படுவர்.
அதே நேரம் எல்லா ஆட்சியையும் விட சிறப்பான ஆட்சியையும் கொடுத்துள்ளார். நாட்டின் பிரதமராக ஆவதற்கான வாய்ப்பு ஒரு முறை அவருக்கு கிடைத்துள்ளது. ஆனால், என் உயரம் எனக்குத் தெரியும் என்று பிரதமர் பதவியை ஏற்க மறுத்து விட்டார். வேறு யாரும் இது போல் சொல்லியிருக்க மாட்டார்கள்.
தற்போது தி.மு.க.வின் தலைமைக்கும் ஸ்டாலினைக் கொண்டு வந்து நல்லதொரு முடிவைத் தந்து சென்றுள்ளார். எதிர்வரும் தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இடம்பெறும் என்று எங்களின் அகில இந்திய தலைமையும் உறுதியாகத் தெரிவித்துள்ளதாகவும் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.