பலாலி விமான நிலையத்தை, சிறிலங்கா விமானப்படையும் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையும் கூட்டு முயற்சியாக அபிவிருத்தி செய்வதற்கான அமைச்சரவைப் பத்திரம் இன்று சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக, போக்குவரத்து அமைச்சின் செயலர் விதானகமகே தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சு, சுற்றுலா அமைச்சு, கொள்கை திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு ஆகியன இணைந்து, 2 பில்லியன் ரூபா செலவில், பலாலி விமான நிலையத்தை பிராந்திய விமான நிலையமாக, அபிவிருத்தி செய்வதற்கான இந்த திட்டத்தை, முன்வைக்கவுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.
பலாலி விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான திட்டத்தை மூன்று மாதங்களுக்குள் தயாரிப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாடு ஒன்றில், இந்திய வெளிவிவகார அமைச்சும் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையும் அண்மையில் கையெழுத்திட்டிருந்தன.
பலாலி விமான நிலையம் அபிவிருத்தி செய்யப்பட்டதும், அதனை சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையே முகாமைத்துவம் செய்யும். கட்டுநாயக்க விமான நிலையத்தில், உள்ளதைப் போன்று, விமானப்படையும் நிலைகொண்டிருக்கும்.
சாதாரண பயணிகளைக் கையாளுவதற்குத் தனியான பிரிவு, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் கீழ் செயற்படும். இராணுவப் பிரிவை சிறிலங்கா விமானப்படை முகாமைத்துவம் செய்யும்.” என்றும் அவர் தெரிவித்தார்.