அரபிக் கடலையொட்டியுள்ள கர்நாடகா, கேரளா, தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் சனிக்கிழமை தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனையொட்டியுள்ள லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது புயல் சின்னமாக மாறி அடுத்த 48 மணிநேரத்தில் அது மேலும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் சென்றுவிடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் 5-6 திகதிகளில் காலை 8.30 மணி முதல் தமிழகம் மற்றும்புதுவையிலும், கேரளாவிலும் மிக பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் அதன்பிறகு பலத்த மழைபெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையே குமரிகடல் பகுதியில் இருந்து வடக்கு கேரளா வரை பரவிய மேலடுக்கு சுழற்சி தெற்கு மராட்டியம் வரை நீடிக்கிறது மற்றும் தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய இலங்கை மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் அடுத்த 48 மணி நேரத்துக்கு தமிழகம் மற்றும் புதுவையில் அனேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தற்போது தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.