மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் காணிகள் வழங்கியமை எனக்குத் தெரியாது. உடனடியாக அங்கு முன்னெடுக்கப்படும்
அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்தவும். இவ்வாறு அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வடக்கு – கிழக்கு மாகாண அரச தலைவர் சிறப்புச் செயலணியின் கூட்டம் அரச தலைவர் செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இந்தக் கூட்டத்திலேயே மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள், மகாவலி எல் வலயத்தினால் அபகரிக்கப்பட்டு பெரும்பான்மையின மக்களுக்கு வழங்கப்படுகின்றது. இந்த விடயத்தை கடந்த கூட்டத்தில் சுட்டிக்காட்டியபோது, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று நீங்கள் (அரச தலைவர்) தெரிவித்திருந்தீர்கள்.
ஆனால் நீங்கள் பொறுப்பாக இருக்கின்ற மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் ஊடாக காணி அனுமதிப் பத்திரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், அதற்கான ஆதாரத்தையும் காண்பித்தார்.
இதன்போது அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர் கூறுவது சரி என்றும், தனக்குத் தெரியாமல் இது வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தச் செயற்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும், எந்தவொரு காரணத்துக்காகவும் அனுமதிப் பத்திரம் வழங்கப்படக் கூடாது என்றும் அரச தலைவர் உடனடியாகவே பணிப்புரை விடுத்துள்ளார்.
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர், நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமையினாலேயே காணி உரிமப் பத்திரம் வழங்கவேண்டிய தேவை ஏற்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த வழக்கு மீளப் பெறப்பட வேண்டும் என்பதை நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
மகாவலி எல் வலயம் தொடர்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சு நடத்தி முடிவு எடுக்கும் வரையில் எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கவேண்டாம் என்று அரசதலைவர் உத்தரவு பிறப்பித்துள்ளார்