மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்ட தாமரைத் தடாகத்தில் விழுந்து 7 வயது சிறுமியொருவர் பலியான சம்பவம் தொடர்பாக பிரதேச செயலாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் ஏறாவூர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட மூவரையும் 14 நாள் விளக்கமறியலில் வைக்குமாறு ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க இலங்கை தண்டனை சட்டக்கோவை 298 ஆம் பிரிவின் பிரகாரம் வழக்கு தொடரப்பட்டு தாமரை தடாகம் அமைப்பதற்கு உரிமை வழங்கப்பட்ட சவுக்கடி மாதர் கிராம அபிவிருத்திச் சங்கத்தைச் சேர்ந்த சவுக்கடி கடற்கரை வீதி வீதியைச் சேர்ந்த செல்வராசா செவ்வந்தி, நடராஜன் அமலினி மற்றும் ஒப்பந்தகாரர் ஞானபிரகாசம் யூலியன் ஜெயப்பிரகாஸ் ஆகியோரை புதன்கிழமை (03) ஏறாவூர்ப் பொலிஸார் கைதுசெயதனர்.
குறித்த சந்தேக நபர்களிடம் வாக்குமூலம் பெறப்பட்டதைத் தொடர்ந்து ஏறாவூர் சுற்றுலா நீதவான் நீதிமன்றில் நீதிபதி கறுப்பையா ஜீவராணி முன்னிலையில் ஆஜர் செய்தபோது சந்தேக நபர்களை எதிரவரும் 17ஆம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்திரவிட்டார்.
அகஸ்ட் மாதம் 09 ஆம் திகதி மட்டக்களப்பு மயிலம்பாவெளி காமாட்சி கிராமத்தில் அமைக்கப்பட்ட தாமரைத் தடாகத்தில் வீழ்ந்து மட்டக்களப்பு திருச்செந்தூரைச் சேர்ந்த 7 வயதான அனுரஞ்சித் அனுசிரா என்ற சிறுமி உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணை செய்துவந்த ஏறாவூர்ப் பொலிஸார் தாமரைத் தடாகம் அமைக்கப்பட்டமை தொடர்பாக அறிக்கையினை ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளரிடம் கோரியிருந்தனர்.
பிரதேச செயலாளர் வழங்கிய அறிக்கையின் பிரகாரம் குறித்த சதேக நபர்கள் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.