அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் பன்னாட்டுச் சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதியை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா மீறிவிட்டார். இது தொடர்பில் பன்னாட்டுச் சமூகத்திடம் நாம் முறைப்பாடு செய்வோம். அது மட்டுமல்லாது, அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி கொழும்பிலும் போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்தார்.
அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக நேற்றுக் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
‘சிறிலங்கா அரசே! நல்லிணக்க அரசே!அரசியல் கைதிளுக்கு பொதுமன்னிப்பு வழங்கு’, ‘அரசே பயங்கரவாத தடைச்சட்டத்தை இல்லாமல்செய்’, ‘தமிழ் அரசியற் கைதிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களை விடுதலை செய்’ போன்ற கோசங்களை எழுப்பினர்.
வன்னிக் குறோஸ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள், கிராம அமைப்புகள், விளையாட்டு கழகங்கள், வர்த்தகர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என்று பலர் கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தின் முடிவில் மாவட்டச் செயலகத்தில் மனுக் கையளிக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்ததாவது,
தமது உயிர்களை துச்சமாக மதித்து சிறைகளில் தமிழ் அரசியல் கைதிகள் சாகும் வரை உணவுஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்கள் தங்களை மன்னித்து விடுவிக்க வேண்டும் அல்லது மறுவாழ்வு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று கோருகின்றார்கள். அவர்கள் விடுவிக்கப்படவேண்டியவர்கள். அரசியல் கைதிகள் விடயம் தொடர்பில் அரசுடன் நாம் பேச்சு நடத்தியுள்ளோம். அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனவுடன் மீண்டும் பேச்சு நடத்துவோம்.
ஜே.வி.பியினரும் அரசுக்கு எதிராக ஆயுதம் தூக்கிப் போராடியவர்கள். அவர்களுக்கு மன்னிப்பு வழங்கி ஆயிரக்கணக்கானவர்களை சிறையிலிருந்து விடுவித்தது. பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அவர்கள் விடயம் ஆராயப்பட்டது. தமிழ் அரசியல் கைதிகள் என்பதால், இந்த விடயம் இழுத்தடிக்கப்படுகின்றது.
தமிழ் அரசியல் கைதிகள் எதற்காகப் போராடினார்கள் என்ற உண்மைகளை கண்டறியாமல் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல் தமிழ் அரசியல் கைதிகளை வாட்டி வதைத்து அவர்கள் உயிருக்கு உலை வைக்கின்றார்கள். இந்த அரசின் செயற்பாட்டை நாங்கள் கண்டிக்கின்றோம். தமிழ் அரசியல் கைதிகள் விரைவில் விடுவிக்கப்படவேண்டும். அவ்வாறு விடுவிக்கப்படாத பட்சத்தில் நாங்கள் இந்தப் போராட்டங்களை கொழும்பில் தொடரவேண்டி இருக்கும். போராடுவது மட்டுமல்ல ஜ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடத்தில் முறையிடவேண்டியிருக்கும் என்றார்.