யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் நேற்று இரவு 3 இடங்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடந்துள்ளன. அதனால் நகரப் பகுதி பதற்றத்துக்கும் பரபரப்புக்கும் உள்ளானது. ரோந்து நடவடிக்கைகளிலும், சோதனை நடவடிக்கைகளிலும் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளபோதும் 6 பேர் ஆளுக்கு ஒரு வாளுடன் அட்டகாசத்தில் ஈடுபட்டமை மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் நாச்சிமார் கோவிலடிப் பகுதி, ஓட்டுமடம் பகதி, யாழ்ப்பாணம் பி.ஏ.தம்பி லேன் ஆகிய இடங்களிலேயே நேற்று இரவு வாள்வெட்டுக் குழு அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் வர்த்தக நிலையங்கள், வாகனங்கள் சேதங்களுக்க உள்ளாகின தெரிவிக்கப்பட்டது.
நாச்சிமார் கோவிலடிப் பகுதியில் இரவு 8.13 மணியளவில் பட்டா ரக வாகனம் ஒன்றை வழிமறித்த வாள்வெட்டுக் குழுவினர் வாகனத்தை அடித்தும், வெட்டியும் சேதங்களுக்னு உள்ளாகியுள்ளனர்.
8.20 மணியளவில் யாழ்ப்பாணம் பி.ஏ.தம்பி லேனுக்குள் நுழைந்த குழுவினர் அங்குள்ள வர்த்தக நிலையம் ஒன்றைத் தாக்கியுள்ளனர்.
கண்ணாடிகளை உடைத்து, பொருள்களைச் சேதப்படுத்திவிட்டு ஓரிரு நிமிடங்களில் அங்கிருந்து தப்பித்தனர். முகங்களை கறுப்புத துணியால் மூடிக்கட்டியவாறு மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த ஆறு பேரே அந்த நாசகாரச் செயலைச் செய்துள்ளனர். அனைவரும் ஆளுக்கொருவாள்களுடன் வந்தனர் என்று சம்பவ இடத்தில் நின்றவர்கள் கூறினர்.
சம்பவ இடத்துக்கு சிவில் உடை தரித்த சிறப்பு அதிரடிப் படையினர் வந்தனர். அவர்கள் விசாரணைகளை மேற்கொண்டனர். சிசிரிவி கமராவின் பதிவுகளைப் பெற்றனர். சிறிது நேரத்தில் யாழ்ப்பாணப் பொலிஸார் வந்தனர். அவர்களும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன்பின்னர் ஓட்டுமடம் பகுதியில் வீதியால் சென்ற ஒருவர் மீது வாள் வீசி அச்சுறுத்தியவாறு அந்தக் குழு சென்றுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது. வாள்வீச்சுக்கு உள்ளானவர் தெய்வாதீனமாகக் காயங்களில் இருந்து தப்பிக் கொண்டார் என்றும் கூறப்படுகின்றது.
இந்தச் சம்பவங்கள் சுமார் அரை மணி நேரத்துக்குள் நடந்துள்ளன. ஒரே குழுவே இந்த 3 சம்பவங்களில் தொடர்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.
யாழ்ப்பாணத்தில் வன்முறைச் சம்பவங்களை அடுத்துப் பொலிஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்படுகின்றது. பொலிஸாரின் சுற்றுக்காவல், சோதனை நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் ஆளுக்கொரு வாளுடன் வீதிகளில் துணிவாக பயணித்து வாள்வெட்டுக்களில் குழுக்கள் ஈடுபடுவது மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.