நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவிவரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் காயமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் சீரற்ற காலநிலையால் 2 இலட்சத்து 37 ஆயிரத்து 936 குடும்பங்களைச் சேர்ந்த 8 இலட்சத்து 3 ஆயிரத்து 496 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்நிலையம் குறிப்பிட்டுள்ளது.
மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 6 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதுடன் 1042 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடன் கூடிய காலநிலை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் பி.ப 2.00 மணிக்கு பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல், மத்திய, வடமத்திய ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் 100 மி.மீ க்கும் அதிகமான மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது