சமீபகாலமாக மற்றவர்களை விட இளம்பெண்களுக்கு பேஸ்புக்கில் பாதுகாப்பற்ற தன்மை நிலவுகிறது. பேஸ்புக்கில் பதிவிடப்பட்ட பெண்களின் படங்களை திருடி, ஆபாசமாக மார்பிங் செய்து வெளியிட்டதால் பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. எனவே பேஸ்புக்கில் இருக்கும் பெண்கள் தாங்களே தங்களை பாதுகாத்து கொள்ள சில டிப்ஸ்…
பேஸ்புக் தகவல்களில் உங்கள் தொலைபேசி எண், முகவரி போன்ற தகவல்களை அளிக்காதீர்கள்.
இன்டர்நெட் சென்டர்கள், கல்லூரி, நண்பர்களின் கணினிகள் மூலம் பேஸ்புக் கணக்கை லாக் இன் செய்தால், வேலை முடிந்ததும் லாக் அவுட்செய்ய மறக்காதீர்கள். இல்லையெனில் உங்கள் பேஸ்புக் கணக்கை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தக்கூடும்
உங்களுடைய போட்டோக்களை பேஸ்புக்கில் பதிவிடும் போது கவனமாக இருங்கள். உங்களுக்கு நன்கு தெரிந்த நட்பு வட்டாரங்கள் மட்டும் பார்க்கும் வகையில் பேஸ்புக் செட்டிங்கை மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்.
நீங்கள் என்ன செய்கிறீர்கள், என்ன செய்யப் போகிறீர்கள், தற்போது எங்கே இருக்கிறீர்கள் என உங்கள் சொந்த விஷயங்களை பேஸ்புக் ஸ்டேட்டஸ் மூலம் தம்பட்டம் அடிக்காதீர்கள்
தெரியாத நபர்களிடமிருந்து வரும் நட்பு அழைப்புகளை ஏற்காதீர்கள். புள்ளிவிபரங்களின் படி பேஸ்புக்கில் உள்ள ஓவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் 130 நண்பர்கள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. 130 பேரில் உங்களுக்கு எத்தனை பேரை நீங்கள் நேரில் சந்தித்த அனுபவம் உள்ளது? என்பதை அறிந்து பின்னர் அவர்களை மட்டும் பின்தொடருங்கள்.
உங்கள் குழந்தைகளின் படங்களை பேஸ்புக்கில் பதிவிடாதீர்கள். குறிப்பாக சிறிய குழந்தைதானே என ஆடை அணியாத உங்கள் பிள்ளைகளின் படங்களை பதிவிட வேண்டாம்.
பேஸ்புக்கில் உள்ள உங்கள் நட்பு வரிசையை அனைவரும் பார்க்கும் வண்ணம் பப்ளிக்கில் வைக்காதீர்கள்.
உங்களுக்கு தொல்லை கொடுக்கும் நபர்கள், ஆபாச புகைப்படங்கள், வீடியோ அனுப்பும் நபர்களை பிளாக் செய்து, ரிப்போர்ட் செய்யுங்கள். உங்கள் சக நண்பர்களிடமும் சொல்லி அந்த குறிப்பிட்ட நபரை ரிப்போர்ட் செய்ய சொல்லுங்கள்.