எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுவிக்கப்பட்ட ஆயுள்தண்டனை கைதி தன்னுடைய மனைவியை முதியோர் இல்லத்தில் சந்தித்துள்ள உருக்கமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இலங்கையை சேர்ந்த பக்கா என்றழைக்கப்படும் விஜயா (60), இலங்கை தமிழர் பிரச்னையின்போது அகதியாக தமிழகத்திற்கு வருகை தந்தவர்.
தெருக்களில் நடனமாடி வந்த விஜயாவின் திறமையை பார்த்து மயங்கிய சுப்பிரமணியம் அவரை காதலிக்க ஆரம்பித்துள்ளார்.
ஆனால் இதற்கு சுப்பிரமணியம் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதனையும் மீறி வீட்டில் இருந்து வெளியேறிய சுப்பிரமணியம் 1985-ம் ஆண்டு விஜயாவை திருமணம் செய்துகொண்டு வாழ ஆரம்பித்தார்.
பின்னர் விஜயா, சுப்பிரமணியனுக்கு தன்னுடைய நடனத்தை கற்று கொடுத்தார்.
நடனத்தை வைத்தே இருவரும் தங்களுடைய வாழ்க்கையை நடத்தி வந்தனர். அதுபோல ஒரு நாள் இரவு நடனத்தை முடித்து விட்டு சாலையோரம் அமர்ந்து ஓய்வெடுத்துக்கொண்டிருந்துள்ளனர்.
அப்பொழுது ஏற்பட்ட தகராறில் சுப்பிரமணியன் ஒருவரை கொலை செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த சூலூர் போலீசார் 1990-ம் ஆண்டு தம்பதியினர் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அங்கு இருவருக்கும் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இருவருக்காக வாதாட யாரும் இல்லாத நிலையில், 25 ஆண்டுகள் தங்களுடைய வாழ்க்கையை சிறையில் கழித்து வந்துள்ளனர். இதற்கிடையில் உடல்நிலை சரியில்லாமல் போன விஜயாவிற்கு மனநிலை பாதிக்கப்பட்டு, பேச்சாற்றலை இழந்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 2013-ம் ஆண்டு விடுதலை செய்யப்பட்ட விஜயா முதியோர் இல்லம் ஒன்றில் தங்கி தன்னுடைய கணவனின் வரவிற்காக காத்திருந்துள்ளார்.
இந்த நிலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுவிக்கப்பட்ட சுப்ரமணியன் 28 ஆண்டுகளுக்கு பின்னர் ஆசையாக தன்னுடைய மனைவி விஜயாவை சந்திக்க சென்றுள்ளார்.
அங்கு கணவனை பார்த்த சந்தோசத்தில், விஜயா வேகமாக ஓடிவந்து கணவனை கட்டி தழுவி கண்ணீர் வடித்துள்ளார். பின்னர் வேகமாக அவரை அழைத்து சென்று தன்னுடன் தங்கியிருந்த அனைவருக்கும் அறிமுகம் செய்து வைத்துள்ளார்.
இதற்கிடையில் வார்த்தைக்கு வார்த்தை, “நீ சாப்டியா விஜயா” என 20 முறைக்கு மேல் சுப்பிரமணியன் கேட்க அதை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் அனைவரின் மனதையும் நெகிழ்ச்சியுறச் செய்துள்ளது.
இதுகுறித்து சுப்பிரமணியம் கூறுகையில், நாங்கள் எங்களுடைய சொந்த ஊருக்கே திரும்ப உள்ளோம். அங்கு யாரும் எங்களை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். கிடைக்கும் வேலையை வைத்துக்கொண்டு என்னை மட்டுமே நம்பி வந்துள்ள என்னுடைய மனைவியை காப்பாற்றுவேன் என கூறியுள்ளார்.