மின்சாதன பொருட்களும், புதிய தொழில்நுட்பங்களும் மனித வாழ்க்கையை எவ்வளவு இலகுவாக்குகின்றனவோ அவ்வளவு ஆபத்துகளும் அவற்றை பயன்படுத்துவதில் நிறைந்திருக்கின்றன. இத்தகைய தொழில்நுட்டங்கள் மற்றும் மின்சாதன பொருட்களால் அவ்வப்போது நிகழும் சம்பவங்களே நாம் அவற்றை மிகுந்த கவனத்துடன் கையாள வேண்டுமென்ற எண்ணத்தை நமக்கு உண்டாக்குகின்றன என்றால் அதில் மிகையில்லை.
அந்த வகையில், மின்சாதன பொருட்களின் காரணமாக ஓர் அதிர்ச்சிகர விபத்து கன்னியாகுமரியில் அரங்கேறியிருக்கிறது. கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகில் உள்ள சிரயான்குழியைச் சேர்ந்த பென்னட், மகிழ் ஜெபகனியின் மகள் பெர்ஜின். இவர் மார்த்தாண்டம் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் பெர்ஜின் மற்றும் அவரது தாயார் மகிழ் ஜெபகனியும் மட்டுமே இருந்துள்ளனர். பின்பு இரவு 10 மணிவரை லேப்டாப் பயன்படுத்தி பெர்ஜின் படித்துக் கொண்டிருந்ததால் அவர் தயார் படித்து முடித்தவுடன் தூங்குமாறு கூறிவிட்டு தூங்கச் சென்றுள்ளார்.
மறுநாள் காலை விடிந்ததும் மகிழ் ஜெபக்கனி எழுந்து பார்க்கையில் பெர்ஜின் கருகிய நிலையில் லேப்டாப் மீது சாய்ந்து கிடந்தார். அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து என்னவென்று பார்க்கையில் மின்சாரம் தாக்கிய நிலையில் பெர்ஜின் இறந்துகிடந்தது தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து மார்தாண்டம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மாணவி பெர்ஜியின் உடலை மீட்டு அரசு மருத்துவமணைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், காவல்துறையினர் மேற்கண்ட சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.