கனடாவில் 25 ஆண்டுகளாக வாழும் அகதிகள், கனேடியர்களைவிட அதிகம் சம்பாதிப்பதாக புலம்பெயர்தல் துறை ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது.
1980களின் இறுதியிலும் 1990களின் ஆரம்பத்திலும் கனடாவுக்கு வந்த அகதிகள் சராசரி கனேடியரைவிட அதிகம் சம்பாதிக்கிறார்கள்.
புலம்பெயர்தல் துறை ஆவணம் ஒன்று, கனடாவில் 25 ஆண்டுகளாக வாழும் அகதிகள், கனேடியர் ஒருவரின் ஆண்டு வருமானமான 45,000 டொலர்கள் அல்லது அதைவிட அதிகம் சம்பாதிப்பதாக தெரிவிக்கிறது.
மூத்த, துறை அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டும் அந்த அறிக்கை, சமீபத்தில் சிரியாவிலிருந்து வந்த 50,000 அகதிகள், இப்போதிலிருந்து பல ஆண்டுகளுக்குப் பின் ஏற்கனவே பல ஆண்டுகளாக கனடாவில் இருக்கும் அகதிகளைப்போலவே நன்றாக சம்பாதிப்பார்கள் என்று கூறுகிறது.
1981 முதல் 2014 வரையிலான காலகட்டத்தின் முதல் பத்தாண்டுகளில், அரசு உதவி பெற்ற அகதிகள் அன்றைய சூழலில் ஆண்டொன்றிற்கு 20,000 டொலர்களுக்கும் குறைவாகவே சம்பாதித்தார்கள்.
ஆனால் கனடாவில் 25, 30 ஆண்டுகள் வாழ்ந்தபின் சராசரியாக ஒரு அகதி ஆண்டொன்றிற்கு 50,000 டொலர்கள் சம்பாதிக்கிறார், இது ஒரு சராசரி கனேடியரின் வருமானத்தைவிட 5,000 டொலர்கள் அதிகம் ஆகும்.
இந்த அறிக்கையை பெற உதவியாக இருந்தவரான வழக்கறிஞரான Richard Kurland கூறும்போது, பெரும்பாலான அகதிகள், அவர்கள் எந்த நாட்டிலிருந்து வந்தவர்களானாலும் சரி, தங்கள் திறமையை வளர்த்துக் கொண்டு தங்கள் வேலையில் சிறந்து விளங்குவதை அந்த அறிக்கையிலிருந்து நன்றாக விளங்கிக் கொள்ள முடிவதாக தெரிவிக்கிறார்.
என்றாலும் பல ஆண்டுகளுக்கு முன் வந்த அகதிகள் நல்ல நிலையை அடைந்தது நல்ல செய்திதான் என்றாலும், தற்போது வந்திருக்கும் சிரிய அகதிகளிடமும் அதேபோல் எதிர்பார்க்க முடியுமா என்பதை இப்போதைக்கு கணிப்பது கடினம்தான் என்கிறார்.