பிரித்தானியாவில் மறைந்த இளவரசி டயானாவின் நினைவாக, கடந்த 1999ஆம் ஆண்டில் இருந்து சமூக மேம்பாட்டிற்காக முயற்சி எடுக்கும் இளைஞர்களுக்கு ‘இளவரசி டயானா’ விருது வழங்கி ஊக்குவிக்கப்பட்டு வருகிறது.
இந்த விருதினை, சமூக மேம்பாட்டிற்கான பணிகளில் 9 முதல் 25 வயதிற்குள் ஈடுபட்டவர்கள் பெற முடியும்.
துபாயில் வசித்து வரும் தமிழகத்தை சேர்ந்த பேபி சாதனா, பல்வேறு சமூக சேவைகள் மற்றும் சமூக மேம்பாட்டிற்கான பணிகளில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் ஈடுபட்டு வருகிறார்.
ராமின் ‘பேரன்பு’ படத்தில் ஆட்டிசம் குறைபாடு உள்ளவராக சாதனா நடித்துள்ளார். அப்போது இயக்குநர் ராமின் அறிவுறுத்தலின் பேரில், ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுகளுடைய பல குழந்தைகளுக்கு சாதனா பயிற்சியளித்துள்ளார்.
அவர்களுக்கு Speech therapy, நடனம், குறைகளை மறந்து நிறைகளை கொண்டாடும் மனப்பக்குவம் போன்ற விடயங்களை சாதனா கற்றுக் கொடுத்துள்ளார். இவரது சமூக அக்கறையை கவனித்த பள்ளி நிர்வாகத்தினர், ’இளவரசி டயானா’ விருதுக்கு அவரது பெயர் பரிந்துரை செய்தனர்.
அதன் பின்னர், எத்தனை மாதங்கள் அவர் தொடர்ச்சியாக பயிற்சியளிக்கிறார் என்பதையும் கண்காணித்தும், பயிற்சி பெற்ற குழந்தைகளிடம் நேர்க்காணல் செய்தும், அவர்களின் திறன் மேம்பாட்டை பரிசோதித்த பின்னர் சாதனாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து சாதனா கூறுகையில், ‘இந்த விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால், என்னை விட மிகச் சிறப்பாக சமூக சேவையாற்றும் இளைஞர்கள் நாடெங்கிலும் உள்ளனர்.
நான் துபாயில் படிப்பதனால் என்னை ஊக்குவிக்கும் முயற்சியில் பள்ளி நிர்வாகத்தினர் ஈடுபட்டனர். எனக்கு விருது வாங்குவது இது முதல்முறை கிடையாது. ஆனால், என்னை விட சிறப்பாக சேவையாற்றும் பலருக்கு இதுபோன்ற விடங்கள் பற்றி விழிப்புணர்வு இல்லை.
அதனால் மற்ற பள்ளிக் குழந்தைகளுக்கும் உலக அளவிலான அங்கீகாரம் கிடைக்க, விருதுக்கான வலைதளப் பக்கத்தில் அவர்களைப் பற்றிய விவரங்களை பதிவிடுங்கள்’ என தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாதமே இந்த விருது வழங்கும் விழா லண்டனில் நடைபெற்றுள்ளது. ஆனால், சாதனாவால் கலந்துகொள்ள முடியாததால், தற்போது அவரது வீட்டிற்கு இவ்விருது அனுப்பப்பட்டுள்ளது.