இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரு புதல்வர்களையும் கட்டார் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றமையானது ராஜதந்திர முறையை மீறும் செயல் அல்ல என கட்டாருக்கான இலங்கை தூதர் ஏ.எஸ்.பி.லியனகே தெரிவித்துள்ளார்.
இந்த மாத ஆரம்பத்தில் கட்டாருக்கு விஜயம் செய்திருந்த மஹிந்த ராஜபக்சவின் மகன்மார்களான யோசித்த மற்றும் ரோஹித்த ஆகியோரை லியனகே விமான நிலையத்தில் வைத்து வரவேற்றார்.
அத்துடன் அவர்களின் பொதிகளில் ஒன்றையும் அவர் கையில் சுமந்து சென்றார். இந்த செயல் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் வெளியிடப்பட்டு வந்தன.
இந்த நிலையிலேயே லியனகே இது தொடர்பில் தமது கருத்தை வெளியிட்டுள்ளார். இரண்டு இளைஞர்கள் பல பொதிகளுடன் கஸ்டப்படும்போது அவர்களுக்கு உதவ வேண்டியது கடமை என்ற அடிப்படையிலேயே தாம் உதவியதாக லியனகே தெரிவித்துள்ளார்.