தமிழர்களினதோ அல்லது தமிழ் பேசுபவர்களினதோ பதவியுயர்வுகளைத் தடுக்கவேண்டிய தேவை அரசாங்கத்துக்குக் கிடையாது.
அவ்வாறான பதவி உயர்வுகள் அதிகரிக்கப்படுவதையே விரும்புகின்றோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
நிர்வாகசேவை தரம் மூன்றுக்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த பரீட்சை இரத்துச் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நேற்று பாராளுமன்றத்தில் பிரதமரிடத்திலான கேள்வி நேரத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ளஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார்.
மேலும் நிர்வாகசேவை தரம் மூன்றுக்கு நடத்தப்பட்ட போட்டிப் பரீட்சையின் போது வினாத்தாள் ஒன்று பரீட்சைக்கு முன்னர் வெளியானதாலேயே பெறுபேறுகள் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.