ஒவ்வொரு வருடமும் நவராத்திரியின் தொடக்கத்தில் வீட்டில் கொலு வைத்து பூஜை செய்வர். வீட்டில் கொலு வைப்பது எதற்காக என்று தெரியுமா?
பெண்கள் பலர் நவராத்திரி ஆரம்பித்து விட்டாலே வீட்டில் கொலு வைத்து அலங்காரம் செய்ய ஆரம்பிப்பர். இந்த வருடம் நவராத்திரி நாளை புதன்கிழமை 10-ம் தேதியில் இருந்து 18-ம் தேதி வரை நடைபெறுகிறது.
ஒன்பது நாட்கள் வீட்டில் கொலு வைத்து பெண்கள் பூஜை செய்து வழிபடுவர். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களை வரவழைத்து பாட்டு பாடி, நடனம் ஆடி விஷேசமாக கொண்டாடுவர்.
ஒவ்வொரு நாளும் விதவிதமான பிரசாதங்கள் படைத்து சாமிகளுக்கு வழிபாடு செய்து வேண்டுதல் பலவற்றை செய்வர்.
இதில் மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று படிகளில் கொலு பொம்மைகளை வைத்து ஒன்பது நாள் நவராத்திரி பூஜையை வெகு விமர்சியாக வழிபடுவர்.
இப்பூஜை பாரம்பரிய முறைப்படியும் பொம்மைகள் வைக்கப்பட்டு வழிபடுவர். ஐம்பூதங்களில் ஒன்றான மண்ணால் செய்யப்பட்ட பொம்மைகளை கொலுவில் வைத்து வழிபடுவர். இதனை வைத்து பூஜை செய்வோருக்கு சகல சுகங்களையும், சவுபாக்கியங்களையும் அளிப்பேன் என்று தேவி புராணத்தில் அம்பிகை கூறியுள்ளார் என்று பலரால் நம்பப்படும் ஒன்றாகும்.
பலரும் ஒன்பது படிகள் வைத்து கொலு பூஜையை தொடங்குவர்.
முதல் படிகளில் ஓரறிவு உயிரினமான மரம், செடி, கொடி போன்ற பொம்மைகளும்,
இரண்டாம் படிகளில் இரண்டறிவு உயிரினமான நத்தை, சங்கு, ஆமை போன்ற பொம்மைகளும்,
மூன்றாவது படிகளில் மூன்றறிவு உயிரினமான எறும்பு, கரையான் பொம்மைகளும்,
நான்காவது படிகளில் நான்கறிவு உயிரினமான நண்டு, வண்டு பொம்மைகளும்,
ஐந்தாவது படிகளில் ஐந்தறிவு உயிரினமான ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகளும்,
6-வது படிகளில் ஆறறிவு உயிரினமான மனித பொம்மைகளும்,
7-வது படிகளில் மனிதனுக்கு மேல் உயிர்கள் என கருதப்படும் மகரிஷிகள், முனிவர்கள் பொம்மைகளும்,
8-வது படிகளில் தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்களும்,
9-வது படிகளில் பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகர் போன்ற கடவுகள்களின் பொம்மைகளையும் வைத்து வழிபடுவர்.
இவை ஒன்பது நாட்களுக்கு அதாவது நவராத்திரி முடியும் வரை வீட்டில் வைத்து, சிறப்பான பூஜைகள் செய்து வழிபடுவர்.
இதனால் வீட்டில் உள்ள அனைவருக்கும் நன்மை பயக்கும் என பல பெண்கள் வருடாவருடம் தொடர்ந்து வழிபடுகின்றனர்.