இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய இலங்கை அமைச்சருமான அர்ஜுனா ரணதுங்கா மீது பாலியல் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது.
1996-ம் ஆண்டு இலங்கை உலக கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் ரணதுங்கா. இவர் 296 ஒருநாள் போட்டிகள் மற்றும் 93 டெஸ்ட் போட்டிகளில் இலங்கைக்காக விளையாடி உள்ளார். இந்திய விமானப் பணிப்பெண் ஒருவர் புதன்கிழமை பேஸ்புக்கில், இந்திய ஓட்டல் ஒன்றில் நீச்சல் குளம் அருகே ரணதுங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி உள்ளார்.
ஒட்டலின் நீச்சல் குளம் அருகே நடந்து சென்றபோது ரணதுங்கா என் இடுப்பை பிடித்து கொண்டு இழுத்து, என் மார்பின் பக்கமாக கைகளை கொண்டு வந்தார். மிகவும் அச்சம் அடைந்த நான், அவரது கால்களில் உதைத்தேன். இந்திய பெண்ணோடு தவறாக நடக்க முயற்சி செய்கிறார் என்று புகார் கூறி பாஸ்போர்ட்டை முடக்கி விடுவேன் என்று கூறினேன். அத்துடன் நேரத்தை வீணடிக்காமல் நான் வரவேற்பறையை நோக்கி வேகமாக ஓடி புகார் கூறினேன். இருந்தாலும் இது உங்கள் தனிப்பட்ட விஷயம் என்று அவர்கள் கைவிரித்துவிட்டனர் என்று பதிவிட்டுள்ளார்.
மற்றொரு பெண் தானும் ஒரு கிரிக்கெட் வீரரால் பாலியல் தொல்லைக்கு உள்ளானேன் என்ற தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருந்தார். அதை ஸ்கிரீன்ஷாட் எடுத்துள்ள பாடகி சின்மயி, இது இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.