சமீபத்தில் நடந்த பேச்சுவார்த்தையில் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு பற்றிய இணக்கப்பாட்டை எட்ட முடியாமல் போனதென தோட்டத் தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும் இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான எஸ்.ராமநாதன் தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சம்பள அதிகரிப்பு பற்றிய மற்றுமொரு சுற்று பேச்சுவார்த்தை இன்று இடம்பெறவுள்ளது.
இன்றைய பேச்சுவார்த்தையில் இணக்கப்பாட்டை எட்ட முடியாவிட்டால், சம்பள பிரச்சனையை தொழில் திணைக்களத்தினதும், அரசாங்கத்தினதும் கவனத்திற்கு கொண்டு வரப்போவதாக ராமநாதன் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டு உடன்படிக்கையின் பிரகாரம் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை தொழிலாளர்களின் சம்பள கொடுப்பனவை அதிகரிக்க வேண்டும். 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கைச்சாத்திட்ட உடன்படிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை முடிவடைகிறது.
இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர்களின் நாள் சம்பளத்தை 500 ரூபாவிலிருந்து 575 ரூபா வரை அதிகரிக்க முதலாளிமார் சம்மேளனம் இணங்கியது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ராமநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.