மஹிந்தவின் ஆட்சி தொடர்ந்திருந்தால் நானும் எனது குடும்ப உறுப்பினர்களும் காணாமலாக்கப்பட்டிருப்போம் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘பாரத லக்ஷ்மன் கொலை வழக்கு தீர்ப்புடன் நீதிமன்றத்தின் சுதந்திரம், நீதிமன்றத்தின் பலம் சம்பந்தமாக மிகப் பெரிய பக்கம் புரட்டப்பட்டுள்ளது. எந்த அரசாங்கத்தின் ஆட்சியிலும் இந்தளவுக்கு நீதிமன்றத்தின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்ட சந்தர்ப்பம் இருக்கவில்லை.
இந்த தீர்ப்புடன் நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்க பங்களிப்பு வழங்கியமை குறித்து நான் மீண்டும் மகிழ்ச்சியடைகின்றேன்.
எனக்கு எதிராக அண்மையில் பல ஊடக செய்திகள் வெளியிடப்பட்டன. மகநெகும திட்டத்தில் நான் இரண்டு கோடி ரூபாய் பணத்தை பெற்றதாக செய்தி வெளியாகியது. அதற்கு நான் விளக்கமளித்திருந்தேன். நான் அப்படி பணம் எதனையும் பெறவில்லை. இந்த செய்தியை சில ஊடகங்கள் வெளியிடவில்லை.
எந்த அடிப்படையில் இந்த செய்திகள் புனைக்கப்படுகின்றன என்பது எனக்கு தெரியவில்லை. ஊடகம் ஒரு செய்தியை வெளியிடும் போது சம்பந்தப்படுத்தப்பட்ட தரப்பின் விளக்கத்தையும் வெளியிட வேண்டும்.
இதனால், செய்திகளை கிடைத்தவுடன் ஒரு தரப்பு சார்பாக வெளியிடாது. உண்மையா பொய்யா என்பதை ஆராயுமாறு ஊடங்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
எனது தந்தையின் கொலை சம்பந்தமான தீர்ப்பு தொடர்பில் பௌத்தர் என்ற வகையில் நான் கவலையடைகிறேன். எனினும் நாட்டின் பிரஜை என்ற வகையில் மகிழ்ச்சியடைகிறேன். சட்டத்தின் மாட்சிமையை நிலைநாட்டிய நீதியரசர்கள் அமர்வை நான் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
கடந்த வாரம் முழுவதும் இந்த நபர் விடுதலையடைந்து விடுவார் என பரவலாக பேசப்பட்டது. என்னிடமும் சில ஊடகங்கள் கேட்டன. வழக்கு நடவடிக்கை என்பதால், நான் பதிலளிக்கவில்லை.
சில ஊடகங்கள், நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கி விட்டது போல், விடயங்ளை திரிபுபடுத்தி செய்திகளை வெளியிட்டன.
துமிந்த சில்வாவின் சட்டத்தரணிகள் கூறுவதை நீதிபதிகளின் நிலைப்பாடு என்று மக்கள் நினைக்கும் வகையில் செய்திகளை வெளியிட்டன. இது ஒரு வகையில் நீதிமன்ற அவமதிப்பு.
போதைப் பொருள் வியாபாரத்தில் சம்பாதித்த பணத்திற்கு அடிப்பணியாமல் நீதிபதிகள் நெஞ்சை நிமிர்த்தி வழங்கிய இந்த தீர்பு குறித்து நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
சில ஊடகங்களுக்கு லட்சக்கணக்கில், கோடிக்கணக்கில் பணத்தை கொடுத்து பொய்யான செய்திகளை உருவாக்க இவர்கள் முயற்சித்தனர்.
இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட நேற்றைய தினம் வரலாற்று சிறப்புமிக்க தினம். எனது தந்தை கொலை செய்யப்பட்டு 7 ஆண்டுகள் கடந்துள்ளன.
இந்த வழக்கின் தீர்ப்பு மாறி இருந்தால், எனது மகனின் பரம்பரைக்கு உங்களது தாத்தா தலையில் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு இறந்து போனார் என்று நான் கூற நேரிட்டிருக்கும்“ என தெரிவித்துள்ளார்.