களனி கங்கை மற்றும் கொழும்பு நகரை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்கு துரித செயற்திட்டமொன்று அவசியம் என்று தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதனை எந்த வகையிலும் தாமதப்படுத்த முடியாது என்றும் கூறினார்.
களனி கங்கையின் தாழ்நில பகுதியின் இடது கரை மற்றும் கொழும்பு நகரை அண்மித்த பிரதேசங்களில் ஏற்படும் வெள்ள நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக முன்வைக்கப்பட்டுள்ள அறிக்கை தொடர்பாக, நேற்று (12) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே, ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகரான கே.டீ.ஏ.எம்.நாணயக்காரவினால் இத்திட்ட அறிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதனை நடைமுறைப்படுத்துதல் தொடர்பாக இக்கலந்துரையாடலின்போது கவனம் செலுத்தப்பட்டது.
2008, 2009 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் கொழும்பு மற்றும் அதன் சுற்றுப்புற பிரதேசங்களில் ஏற்பட்ட வெள்ள நிலைமைகள் தொடர்பாக ஆய்வு செய்தே, இந்த திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக கண்டறிவதற்காக, குறித்த நிறுவனங்களின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை நியமிக்குமாறு பணிப்புரை விடுத்த ஜனாதிபதி, திட்ட அறிக்கையை அமைச்சரவையின் அங்கிகாரத்துக்காக சமர்ப்பிக்குமாறும் தெரிவித்தார்.