சிறுபான்மை மக்களுக்கு சம உரிமை பெற்று கொடுப்பதே அரசாங்கத்தின் பிரதான இலக்கு என அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சின் 20 கோடி ரூபா செலவில் பண்டாரவளை பூணாகலை அம்பிட்டிகந்த தோட்டத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 157 தனி வீடுகளைக் கொண்ட ‘இளஞ்செழியன் புரம்’ கிராமத்தின் திறப்பு விழா அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இன்று இடம்பெற்றது.
இதில் கலந்துக் கொண்ட போதே அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தில் இருந்து தாம் வெளியேற பிரதான காரணமாக இனவாதமே அமைந்தது.
தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சிங்கள மக்களின் ஆதிக்கத்தின் கீழ் இருக்க வேண்டும் என அவர்கள் எதிர்பார்த்தனர்.
உலகில் எந்த மனிதனும் இன்னொருவரின் ஆதிக்கத்தின் கீழ் இருப்பதற்கு தயாரில்லை.
சுதந்திரம் என்பது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமையாகும்.
அனைவரும் இணைந்து இலங்கை என்ற தேசிய சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டும்.
சிறுபான்மையினருக்கு சம உரிமையை பெற்றுக் கொடுக்கும் பணியை மரணத்திற்கு முன்னர் தாம் நிறைவேற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர் நாட்டில் ஒரு லட்சத்து 72 ஆயிரத்து 700 குடும்பங்கள் தொடர் குடியிருப்புக்களில் வசித்து வருவதாக தெரிவித்தார்.
அவர்களுக்கு மலை நாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சினால் காணி உரித்துடன், வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதேவேளை, மலையகம் முழுவதிலும் கல்வி, சுகாதாரம் போக்குவரத்து, விளையாட்டுத்துறை, போசாக்கு, குடிநீர் உள்ளிட்ட வசதிகளை மேற்கொண்டு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இதனிடையே இந்த நிகழ்வில் கலந்துக் கொண்ட தொழில் அமைச்சர் ரவீந்திர சமரவீர, நாட்டில் ஏனைய மக்களுக்கு நிகரான வேதனத்தை பெருந்தோட்ட மக்களுக்கு பெற்றுக்கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன உயர்வு தொடர்பில் தாம் பெருந்தோட்ட கம்பனிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், வெகு விரைவில் தொழிலாளர்களின் வேதனம் தொடர்பிலான அறிவித்தல் வெளியாகும் என குறிப்பிட்டார்.
அத்துடன், அனைத்து தரப்புக்களுடனும் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ள தொழிலமைச்சர் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு வேதன உயர்வுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த பிரதேச சபை தேர்தல் காலத்தில் பெருந்தோட்ட மக்களின் ஊழியர் சேமலாப நிதியை அரசாங்கம் இல்லாதொழிக்கவுள்ளதாக பிரச்சாரங்கள் முன்வைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்த அமைச்சர் ரவீந்திர சமரவீர, பெருந்தோட்ட பணியாளர்களின் சேமலாப நிதிய ஒழிப்பதற்கு எந்த விதமான நடவடிக்கையும் இடம்பெறவில்லையென குறிப்பிட்டார்.
அத்துடன், 2.5 ட்ரில்லியன் ரூபாய் ஊழியர் சேமலாப நிதியை மேலும் அதிகரிப்பதற்கும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.