இலங்கையின் கல்விமுறை தொடர்பில் பல வாதப் பிரதிவாதங்கள் இருந்தாலும் பெரும்பாலான கல்வியியலாளர்களால் விமர்சனத்திற்குள்ளாக்கப்படும் கல்விக்கொள்கையாக தரம் ஐந்தில் நடத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சை முறைமையே காணப்படுகிறது.
பாரிய எதிர்மறை விளைவுகளை உருவாக்கிவருகின்ற இந்த பரீட்சை தற்போது தேவைதானா? என்ற கேள்வி பலரிடம் எழுந்துள்ளது.
புதிய வளர்ச்சி அடையாத கிராமங்களில் உள்ள வளப்பற்றாக்குறையான பாடசாலைகளில் கல்வி கற்கும் திறமையான மாணவர்களை இனக்கண்டு அவர்களை வளமான அல்லது விரும்பிய பாடசாலைகளில் கல்வியை தொடர்வதற்க்கும் வாய்ப்பளிப்பதற்க்கும் அவர்களின் கல்வி உதவி தொகை ஒன்றினை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்டதே இந்த புலமை பரிசில் பரீட்ச்சைத்திட்டம் ஆகும்.
இதில் சித்தியடையும் அரச உத்தியோகஸ்த்தரின் பிள்ளைகள் மற்றும் வசதி படைத்தவர்களின் பிள்ளைகளுக்கு குறித்த உதவி தொகை வழங்கமுடியாது என்பதும் இப்பரீட்ச்சையின் நிபந்தனைகளில் ஒன்றாக இருப்பினும், இப்பரீட்சையில் சித்தியடையும் பிள்ளைகள் அரச உத்தியோகஸ்த்தர்களின் பிள்ளைகள் ஆகவும் தனவான்களின் பிள்ளைகளுமாகவுமே உள்ளனர்.
இவர்கள் பல்லாயிரக் கணக்கான பணத்தையும் நேரத்தையும் செலவு செய்து தங்களது பிள்ளைகளை சித்தி அடையச் செய்வதன் மூலம் தாங்கள் அந்தஸ்தில் உயர்ந்தவர்கள் போன்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதன் மூலம் இப்பரீட்சையின் நோக்கம் கேள்விக்குட்படுத்தப்பட்டுள்ளது.
இதிலும் குறிப்பாக, சித்தியடையும் மாணவர்களில் பெரும்பாலானவர்கள் வளப்பெருக்கமுள்ள மாணவர்களாகவே இருக்கின்றனர். ஆகவே இப்பரீட்சை உருவாகப்பட்டதன் நோக்கம் தரம் மாறி போவது உணரக்கூடியதாக உள்ளது.
சிறுவர்களை உடல்ரீதியாகவும் இ உளரீதியாகவும் துன்புறுத்த கூடாது என்ற சட்டங்களை அமுல்படுத்தி வரும் இலங்கை அரசாங்கம் பத்து வயதுச் சிறுவர்களின் அடிப்படை உரிமைகளை மீறத்தூண்டும் இப் பரீட்சையை தொடர்ந்தும் நடத்தி வருவது வியப்புக்குரியதாகவே உள்ளது.
குறித்த பரீட்சை காலங்களில் தரம் ஜந்தில் கல்வி கற்கும் மாணவர்களை பெற்றோர் சராசரியாக ஒரு மனிதன் உறங்க வேண்டிய நேரத்தை விடவும் குறைவான நேரமே உறங்க விடுவதுடன் பாடசாலை முடிந்ததும் வீட்டிற்க்கு சென்று உடைமாற்றவோ, உணவு உண்பதற்குக் கூட போதிய நேரம் வழங்கப்படாமல், தனியார் வகுப்புக்கள் எனவும், தனிப்பட்ட வகுப்புக்கள் எனவும் அலைக்களிக்கப்படுகின்றனர்.
இக் காலப்பகுதியில் சிறுவர்கள் மாணவர்கள் கடும் மன அழுத்தங்களுக்கும், உடல்ரீதியான அழுத்தங்களுக்கும் உள்ளாவதுடன் சிலர் நோய்வாய்ப்படும் சந்தர்ப்பங்களும் ஏற்பட்டுள்ளது.
இப் பரீட்சை மாணவர்களுக்கான பரீட்சை அல்லாமல் பெற்றோர்கள் தங்களது கெளரவத்திற்கான பரீட்சையாக பார்க்கும் மனப்போக்கும் அதிகரித்திருக்கின்றது.இதனால் அலுவலகங்களில் பணி புரியும் பலர் தங்களுக்குள் முரண்பட்டு கொள்வதுமுண்டு.
அதை விட கொடுமை ஒரே பாடசாலையில் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் கூட தங்களுக்குள் முரண்பட்டுக்கொள்வதுடன் இவை நேரடியாக பரீட்சையில் பங்குபற்றாதவர்களின் புறக்காரணிகளாக அமைகின்றது.
இதை விடவும் இந்த பரீட்சையில் தோற்றுகின்ற மாணவர்கள் தங்களது சிறுவர் பராயத்தில் ஒரு மாணவன் இன்னொரு மாணவனை தனது போட்டியாளனாக பார்க்கின்ற மனப்பான்மை தோன்றுவதுடன் தங்களுக்குள் பகைமையை வளர்த்துக்கொள்கின்றனர்.
இவை அனைத்தையும் விட மாணவர்களை நேரடியாக பாதிக்கும் விதத்திற்கு உள்ளாக்கும் நிலை பரீட்சை பெறுபேறுகள் வெளியானதும் ஏற்படும் நிலையாகும்.
பரீட்சைப் புள்ளிகள் வெளியானதும் சித்தி பெற்ற மாணவர்களை ஊடகங்களும் பாடசாலைகளும் கொண்டாடும் போது சித்தி அடையாத மாணவர்களின் மனங்களில் பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி விடுகின்றது.
நான் நினைக்கின்றேன் ஒரு பிள்ளையின் பாடசாலை வாழ்க்கையில் இது தான் அவர்களுக்கான முதல் பேரிடியாக இருக்கலாம். தங்களைத்தாங்களே ஓரளவு பக்குவப்படுத்திக்கொள்ளும் வயதடைந்த உயர்தர மாணவர்களே பரீட்சையில் தோற்கும் போது தற்கொலை வரை செல்லும் நிலையில், ஒன்றும் அறியாத சிறுவர்கள் எவ்வளவு பாதிக்கப்படுவார்கள் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அவர்களுக்கு தற்கொலை செய்வதற்க்குக்கூட தெரியாத வயதாக இருப்பதனாலேயே தற்கொலைகள் இடம்பெறுவதில்லையே தவிர, மனதளவில் அவர்கள் தற்கொலை செய்துதான் கொள்கின்றனர்.
சித்தி பெற்ற மாணவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும், பாரிய வரவேற்பு நிகழ்வுகளை நடத்தியும் அவர்களை மேடையேற்றி முடி சூட்டிக் கொண்டாடுவதனால் அந்த சிறுவர்கள் தாங்கள் பெரிதாக ஒன்றை சாதித்து விட்டதாகவும், இனி தாங்கள் தான் இந்த பாடசாலையின் கல்விமான்கள் என்ற எண்ணமும் தலைக்கணமும் கூட அவர்களது நடவடிக்கைகளில் மாற்றங்களை காட்ட முற்படுகின்றது.
இதன் விளைவாக புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்த மாணவர்கள் பலர் சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சையில் சித்தியடைய முடியாத நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.பெற்றோர்களுக்குள் குரோதங்களையும், மாணவர்களுக்குள் உளத்தாக்கங்களையும் உருவாக்கும் இந்த பரீட்சை இனியும் தொடரத் தான் வேண்டுமா….?
அரசாங்க கல்வி சார் உயர் அதிகாரிகளே….இது உங்களின் மேலான கவனத்திற்கு….
-ஜனகன் நடராசா.