ஒரு சில கூட்டணியை பார்த்தாலே கண்ணை மூடிக் கொண்டு அவர்களின் படத்திற்கு முதல் நாளே போகலாம். அப்படிபட்ட இயக்குனர்-நடிகர் கூட்டணி என்றால் அது வெற்றிமாறன்-தனுஷ் தான். இவர்களின் பல வருட உழைப்பில் தயாராகி இன்று வெளியாகி இருக்கிறது வட சென்னை. சென்னையை விரும்பும் ரசிகர்களுக்கு வடசென்னை பிடித்ததா பார்ப்போம்.
கதைக்களம்
செந்தில்(கிஷோர்) குணா(சமுத்திரக்கனி) இருவரும் ஆரம்பத்திலேயே ஒரு கொலையை செய்கின்றனர். அந்த கொலையில் இருந்தே பல அரசியல் பிறக்கின்றது.
அதன் பின் செந்தில், குணா இருவரும் பிரிந்து தங்களுக்கென்று ஒரு கேங்கை உருவாக்கி ஒருவரை ஒருவர் கொலை செய்ய துடிக்கின்றனர்.
அந்த நேரத்தில் தனுஷ் (அன்பு) கேரம் ப்ளேயராக வரவேண்டும் என்ற எண்ணத்தில் இருக்க இந்த கேங் வாருக்குள் யதார்த்தமாக உள்ளே வர அதை தொடர்ந்து யார் கொடி வடசென்னையில் பறக்கின்றது, ஆரம்பத்தில் செந்தில் குணா யாரை கொலை செய்தார்கள், தனுஷ் தன்னை சூழ்ந்த பிரச்சனைகளை எப்படி தீர்க்கின்றார் என்பதை படமாக இல்லை பதிவாக செய்துள்ளது இந்த வடசென்னை.
படத்தை பற்றிய அலசல்
படத்தின் கேரக்டரில் ஒவ்வொருவரும் வாழ்ந்து தான் உள்ளனர், யாரையுமே நம்மால் ஒரு நடிகனாக பார்க்க முடியவில்லை. அன்பாக தனுஷ் படத்திற்கு படம் தன்னை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்கின்றார். 18 வயதில் ஆரம்பித்து 30 வயதை தாண்டி அவருக்கான கதாபாத்திரத்தில் வாழ்ந்து உள்ளார்.
வடசென்னை என்றாலே அடிதடி வெட்டுக்குத்து என்பது மட்டுமே மக்களுக்கு தெரியும், இதிலும் அதே தான் என்றாலும் இந்த அரசியல்வாதிகள் தான் அவர்களை அடிமைகள் போல் பயன்படுத்தி தங்கள் அரசியலுக்காக வளரவிடாமல், பாடப்புத்தகத்தை கையில் கொடுக்காமல் கத்திதை கொடுத்து வளர்த்து விடுகின்றனர் என்பதை தோலுரித்து காட்டியுள்ளது.
படத்தின் ஆரம்பத்தில் வரும் ஜெயில் காட்சிகள், அதில் உள்ளே செந்தில் செய்யும் ராஜ்ஜியம், எப்படி போதை மருந்து கை மாறுகின்றது, உட்கார்ந்த இடத்தில் இருந்து லட்சம் லட்சமாக சம்பாதிக்கின்றனர் என்பதை வெற்றிமாறன் காட்டியவிதம் அவரின் உழைப்பு பிரமிக்க வைக்கிறது.
படத்தின் டீடெயிலிங் பற்றி சொல்லியே ஆகவேண்டும், ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டத்தில் ஒரு கலவரம் நடக்கின்றது, அதில் மக்களின் மனநிலை என்ன, அதை தொடர்ந்து சில வருடங்கள் கழித்து எம்.ஜி.ஆர் இறப்பு, அதில் நடக்கும் அரசியல், சாலை அமைக்கின்றேன் என்று குடிசை மக்களை விரட்டுவது, அதற்கு தற்போதுள்ள ஆளங்கட்சியையே படத்தில் காட்டிய விதம் என வெற்றிமாறனுக்கு அசால்ட்டு தைரியம் தான். எழுந்து நின்று பாராட்டலாம்.
அதேபோல் படக்குழுவினர்கள் சென்ஸார் போர்டிற்கு தான் முழு நன்றியை சொல்ல வேண்டும், நாம் நடைமுறையில் பேசும் அத்தனை கெட்ட வார்த்தையும் படத்தில் பீப் இல்லாமல் வருகிறது, கதைக்கு அது அவ்வளவு தேவை என்பதால் ஏ சான்றிதழுடன் வெளியிட்டது நல்ல முடிவு.
படத்தின் பல கதாபாத்திரங்கள் வந்து சென்றாலும் அன்புவிற்கு பிறகு நம்மை ரசிக்க வைப்பது ராஜன் அமீர் கதாபாத்திரம் தான், 40 நிமிடம் வந்தாலும் அன்புவின் முழு வீச்சுக்கு இன்ஸ்பிரேஷனாக ராஜனை வடிவமைத்தது சூப்பர். ஆண்ட்ரியா கடைசி அரை மணி நேரம் மிரட்டிவிடுகின்றார். இரண்டாம் பாதியில் இவர் தான் ஹீரோ என்பது போல் முடிகின்றது.
சந்தோஷ் நாராயணன் இசை மிரட்டியுள்ளது. பின்னணியில் நமக்கே இசையால் ஒரு அச்சத்தை கொண்டு வருகின்றார். அதேபோல் வேல்ராஜின் ஒளிப்பதிவு வடசென்னைக்குள் நாமே சென்று வந்த அனுபவம்.
க்ளாப்ஸ்
நடிகர் நடிகைகள் பங்களிப்பு, ஒரு சீன் என்றாலும் பலரும் ஸ்கோர் செய்கின்றனர்.
படத்தின் கதை களத்திற்காக வெற்றிமாறன் எடுத்த மெனெக்கெடல், உண்மையாகவே வியப்பை தருகின்றது.
இசை ஒளிப்பதிவு செட் போன்ற டெக்னிக்கல் விஷயங்கள்.
மக்களின் வாழ்க்கை முறையை யதார்த்தமாக காட்டிய விதம்.
பல்ப்ஸ்
பெரிதாக ஏதும் இல்லை, நிறைய கதாபாத்திரம் வருவதால் யார் யார் என்று நினைவில் வைக்க கொஞ்சம் தடுமாற்றம் அடைய வைக்கிறது.
மொத்தத்தில் வடசென்னை படம் என்பதை விட தமிழ் சினிமாவின் முக்கிய பதிவு.