யாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் கடும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் வழக்கு ஒன்றுக்காக சந்தேகநபர் ஒருவர் நேற்று(செவ்வாய்கிழமை) முன்னிலையாகியிருந்தார். சந்தேகநபர் வழக்கு நடவடிக்கை நிறைவடைந்து திறந்த மன்றிலிருந்து வெளியேறிய போது, யாழ் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர், அவரைப் பிறிதொரு வழக்கில் கைது செய்ய முற்பட்டுள்ளார்.
பொலிஸ் உத்தியோகத்தர் தனது கணவரை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்துக் கைது செய்ய முற்பட்டார் என்று பெண் ஒருவர் திறந்த மன்றுக்குள் பதற்றத்துடன் வந்து முறையிட்டார்.
பெண்ணின் அந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில் ஆராயுமாறு நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தருக்கு நீதிவான் உத்தரவிட்டார்.
அதுதொடர்பில் ஆராய்ந்த நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர், நீதிமன்ற வளாகத்துக்குள் நின்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை அழைத்து வந்து மன்றில் முன்னிலைப்படுத்தினார்.
“குற்றஞ்சாட்டும் பெண்ணின் கணவரைக் கைது செய்ய முற்பட்டீரா? என பொலிஸ் உத்தியோகத்தரிடம் மன்று கேள்வி எழுப்பியது.
“பெண்ணின் கணவர் வழக்கு ஒன்றில் சந்தேக நபராக உள்ளார். அவரைப் பார்ப்பதற்காகவே நீதிமன்ற வளாகத்துக்குள் வந்தேன்” என்று பொலிஸ் உத்தியோகத்தர் பதிலளித்தார்.
“சந்தேகநபருக்கு இந்த நீதிமன்றில் இன்று வழக்கு உள்ளது என்று அறிந்து கொண்டுதான் அவரைத் தேடி இங்கு வந்தீரா? என்று மன்று மற்றொரு கேள்வியை எழுப்பியது. அதற்கு பொலிஸ் உத்தியோகத்தர் ஆம் என்று பதிலளித்தார்.
“அண்மையில் நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் தாக்கப்பட்டார். இன்று சந்தேகநபர் ஒருவரை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து கைது செய்யும் முயற்சி பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகிறது.
நீதிமன்ற வளாகத்துக்குள் இவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது என்பது தெரியுமா?” என்று நீதிவான் அதிருப்தியை வெளியிட்டார்.
குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் செயலைக் கண்டித்த நீதிவான், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டை விசாரணை செய்யுமாறு யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தல் வழங்கினார்.
அத்துடன், நீதிமன்ற வளாகத்துக்குள் நுழைந்து பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்ய முற்பட்டார் என்று குற்றச்சாட்டை முன்வைத்தவர் மற்றும் அவரது மனைவியிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்ற பொலிஸ் அலுவலகருக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.