5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாளை இரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே நீதி சமூகத்துக்கான தேசிய அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சரத் விஜேசூரிய இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘என்.எம். பெரேரா நிதி அமைச்சராக இருந்த காலத்தில் பொருளாதார நெருக்கடியொன்று ஏற்பட்டது. அப்போது புழக்கத்தில் இருந்த 50 ரூபா மற்றும் 100 ரூபா நாணயத் தாள்களை இரத்து செய்வதற்கு, என்.எம். பெரேரா தீர்மானித்திருந்தார்.
இதன் மூலம், அப்போது நாட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கறுப்பு பணத்தை வெளியே கொண்டுவர முடிந்தது. இதேபோன்று, இன்றும் புழக்கத்திலுள்ள 5000 ரூபா நாணயத் தாளை இரத்து செய்வதன் ஊடாக, கடந்த காலத்தில் அடைந்த நன்மையை விடவும் தற்காலத்தில் அதிக பயன்களைப் பெற முடியும்.
சட்டத்திற்கு முரணான விதத்தில் பணத்தை பல்வேறு முறைகளில் மறைத்து வைத்திருப்பது தொடர்பில் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
சில அரசியல் வாதிகளிடமுள்ள 5000 ரூபா நாணயத் தாள்கள் நிரப்பிய பொதிகள் விகாரைகளிலும், கொள்கலன்களிலும் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன், நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு ஒரு தீர்வாக, இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு கட்டுப்பாடு விதிப்பதை விடவும், அரசாங்கத்திலுள்ள அரசியல் வாதிகள் முன்னெடுக்கும் பாரிய செலவிலான விழாக்களையும், நிகழ்வுகளையும் நிறுத்துவது தான் மிகவும் பொருத்தமான நடவடிக்கையாகும்’ என தெரிவித்துள்ளார்.