சமூக வலைதளங்களில் ராஜாவாக திகழும் பேஸ்புக், கடந்த 2004 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. மார்க் சூகர்பெர்க் உள்ளிட்ட மேலும் சில நபர்களால் துவங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று உலக அளவில் மிகப்பெரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழுகிறது. கோடிக்கணக்கான மக்கள், பேஸ்புக்கை பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், சமீப காலமாக பேஸ்புக் நிறுவனம் கடும் சர்ச்சையில் சிக்கி வருகிறது. அமெரிக்க தேர்தலில் ரஷ்யா தலையீடு, கேம்பிரிட்ஜ் அனலடிகா சர்ச்சை என அடுத்தடுத்த சர்ச்சையில் பேஸ்புக் நிறுவனம் சிக்கியதால், அந்நிறுவனம் கடும் நெருக்கடிக்குள்ளானது.
இந்த நிலையில், பேஸ்புக் நிறுவனத்தின் சேர்மன் பொறுப்பில் இருந்து மார்க் சூகர்பெர்க்கை நீக்குவதற்கான முன்மொழிவை, அந்நிறுவனத்தில் பொது பங்குகளை கொண்டுள்ள பங்குதாரர்கள் முன்மொழிவை கொண்டு வந்துள்ளனர். சில முறைகேடுகளை பேஸ்புக் முறையாக கையளவில்லை என கூறி மார்க்சூகர்பெர்க்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது.
வரும் 2019- மே மாதம் நடைபெறும் பேஸ்புக்கின் ஆண்டு பங்குதாரர்கள் கூட்டத்தில் இந்த முன்மொழிவு ஓட்டெடுப்புக்கு விடப்படும் என்று தெரிகிறது. இந்த முன்மொழிவில், பேஸ்புக்கின் சேர்மன் பதவி, தன்னிச்சையான பதவியாக இருக்க வேண்டும் என்ற ஷரத்து இடம் பெற்றுள்ளதாக செய்திகள் கூறுகின்றன. மார்க் சூகர்பெர்க்கு எதிராக முன்மொழிவு கொண்டு வரப்படுள்ளது குறித்து, பேஸ்புக் நிறுவனம் எந்த கருத்தையும் வெளியிடவில்லை. 60 சதவீதத்திற்கும் மேலான வாக்கு சக்தியை மார்க் சூகர்பெர்க் தன்னிடமே வைத்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.