சபரி மலை இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு, இந்த கோவிலுக்கு விரதம் இருந்து வருடா வருடம் கார்த்திகை மாதம் பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த மாதிரியான விரதம் வேறெந்த கோவிலிலும் இந்தியாவில் கடைபிடிக்கப்படுவதில்லை. இது மிக வித்தியாசமானதாகும். அதுமட்டுமில்லாமல், இந்த அய்யப்பன் மிகவும் சக்தி வாய்ந்தவராக இருக்கிறார். இந்த கோவிலுக்கு அருகே இன்னொரு கோவில் அமைந்துள்ளது. அது மாளிகைபுரம் தேவி கோவில் என்று அழைக்கப்படுகிறது. சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளம் கேரளத்தை புரட்டி போட்டது. இது அய்யப்பனின் கோபம் என பக்தர்கள் சிலர் பேசிக்கொண்டனர். உண்மையில் இன்னொரு விசயம் இந்த இடத்தைப் பற்றி உள்ளூர் வாசிகளால் நம்பப்பட்டு வருகிறது. அது ஒரு பெண்ணின் கோபம். யார் அந்த பெண். அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பது பற்றி இந்த பதிவில் காண்போம்.
சபரி மலை அய்யப்பன்
சபரி மலை மேற்கு தொடர்ச்சி மலையில் அடர்த்தியான காடுகள் நிரம்பிய பகுதியில் வீற்றிருக்கும் சபரிமலை பசுமையான இயற்கை, சலசலவென்றோடும் ஓடைகள் மற்றும் வளைந்து நெளிந்து ஓடும் பம்பா நதி ஆகிய அம்சங்களை கொண்டுள்ளது. இங்குதான் இந்த சபரிமலை அய்யப்பன் கோவில் அமைந்துள்ளது.
அய்யப்பன் மேல் காதல் கொண்ட பெண்
அய்யப்பனின் வரலாற்றையும் கோவிலின் புனிதத்தையும் பற்றி தெரிந்துகொண்ட நமக்கு, இந்த பெண்ணைப் பற்றிய வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அது உள்ளூர் மக்கள் செவி வழியாக சொல்லும் வரலாறு. சொல்லப்போனால் தொன்னம்பிக்கை. யார் அந்த பெண். அய்யப்பனுக்கு அருகேயே அதிகநாள்கள் இருந்துவரும் அந்த பெண்ணுக்கும், கோவிலுக்குள் ஏன் பெண்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா?
நடை தூரம் தான்
மாளிகைபுரம் தேவி கோயில் எனப்படும் இந்த அம்மன் கோயில் ஐயப்பன் கோயிலில் இருந்து இரண்டு நிமிட நடை தூரத்தில் ஒரு சிறு குன்றில் வீற்றுள்ளது. ஐயப்பன் கோயிலுக்கு வலப்புறத்திலுள்ள இந்த கோயிலுக்கு செல்லும்போதே சாரல் நிரம்பிய மலைக்காற்றும் இனிமையான சூழலும் நம்மை தழுவுகின்றன.
தன்னை திருமணம் செய்ய வற்புறுத்திய பெண்
ஐயப்பன் மற்றும் மாளிகைபுரத்து அம்மன் ஆகிய இரண்டு கடவுள்கள் சம்பந்தப்பட்ட பல புராணக்கதைகள் இந்த கோயிலில் பின்னணியில் சொல்லப்படுகின்றன. அதாவது ஐயப்ப கடவுள் மகிஷி எனும் அசுரகணத்தை வதம் செய்து கொன்றபோது அதன் உடற்பாகங்களிலிருந்து ஒரு அழகிய கன்னி வெளிப்பட்டு தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஐயப்பனை வேண்டியதாகவும், பிரமச்சரிய நோக்குடன் அவதாரம் எடுத்திருந்த ஐயப்பன் அதற்கு மறுத்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
அய்யப்பனின் அருகில் குடிகொண்ட பெண்
அந்த பெண் அவதாரம் ஐயப்பனின் அருகிலேயே இருக்க வேண்டி மாளிகை புரத்து அம்மனாக ஐயப்பன் கோயிலுக்கு அருகிலேயே குடிகொண்டுவிட்டதாக ஐதீகக்கதை கூறுகிறது.
காணிக்கையாக வழங்கப்படும் பட்டுப்பாவாடை
பகவதி சேவை எனும் பிரசித்தமான சடங்கு இக்கோயிலில் செய்விக்கப்படுகிறது. கண் மை, பட்டுப்பாவாடை, குங்குமம், வளையல் போன்றவை இந்த சடங்கின்போது பக்தர்களால் காணிக்கையாக மாளிகைப்புரத்து அம்மனுக்கு அளிக்கப்படுகிறது.
தெய்வ நம்பிக்கை நிரம்பிய தேங்காய் உருட்டு
நாகதேவதைகளுக்கான சிறிய சன்னதிகளையும் இந்த கோயில் வளாகத்தில் பக்தர்கள் தரிசிக்கலாம். தேங்காய் உருட்டு எனும் தனித்தன்மையான சடங்கும் பக்தர்களால் மாளிகைபுரத்து அம்மன் கோயிலில் செய்விக்கப்படுகிறது.
சபரி மலைப் பிரதேசம்
ராமாயண காவியத்தில் இடம்பெற்றுள்ள ‘சபரி’ எனும் கதாபாத்திரத்தின் பெயரையே இந்த தெய்வீக மலைப்பகுதி ஏற்றுள்ளது. பத்தனம் திட்டா மாவட்டத்தின் கிழக்குப்பகுதியிலுள்ள இந்த மலைப்பிரதேசத்தின் காடுகள் பெரியார் புலிகள் காப்பகத்தின் ஒரு அங்கம் என்பது குறிப்பிடத்தக்கதாகும். கேரளாவின் இயற்கை எழிலுக்கான சான்றாகவே இந்த சபரிமலை பிரதேசம் புகழ் பெற்றுள்ளது. ஐயப்ப பஹவான் அல்லது ஸ்வாமி ஐயப்பன் எனும் விசேஷமான கடவுள் இங்கு குடிகொண்டுள்ளார்.
விதிமுறைகளும் பெண்களுக்கு அனுமதி மறுப்பும்
சபரி மலை ஐயப்பன் கோயிலுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ள விரும்பும் பக்தர்கள் 41 நாட்களுக்கு புலால் மறுத்து, ரோமம் மழித்தல் தவிர்த்து, புலனடக்கம் மேற்கொண்டு, காலை மாலை பூஜைகள் புரிந்து, கறுப்புடை தரித்து மற்றும் நல்லொழுக்கம் பேணி, கடும் விரதத்திற்குப்பின்னர் இந்த கோயிலுக்கு நடந்தே யாத்திரை மேற்கொள்ள வேண்டும் என்பது ஐதீகம்.
பிரம்மச்சரியம்தான் காரணமா?
இந்த கோவிலின் பெண்களுக்கு அனுமதி இல்லை. அவர்கள் ஏன் அனுமதிக்கப்படுவதில்லை என்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ஒரு முக்கிய காரணம்தான் அய்யப்பன் பிரம்மச்சரியம் கடைபிடிப்பதாக கருதுவது. சிலர் பெண்களை அனுமதிக்கக் கோரி போராடி வருகின்றனர். அப்படி அனுமதி கொடுத்ததனால்தான் வெள்ளம் வந்துள்ளதாக சிலர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அப்படி பார்க்கையில் பெண்களை அனுமதித்தனால்தான் அய்யப்பன் கோபம் கொண்டார் எனவும் நம்பப்படுகிறது.
பெண்கள் அனுமதிக்கப்படாததற்கு உண்மை காரணம் இதுதான்!
சபரி மலை நோன்பு, விரதம் என்பது முற்காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இது இன்று நேற்றல்ல பல ஆண்டுகள். முன்னதாக இந்த கோவிலுக்கு செல்ல வாகன வசதிகள் எல்லாம் செய்யப்படவில்லை. சாலைகள் குண்டும் குழியுமாக, காட்டு பாதையில் செல்லவேண்டியிருந்தது. இதனால் ஆண்களுக்கே சில சமயம் பாதுகாப்பில்லை. அப்படி இருக்கையில் மாதம் ஒரு முறை மாதவிடாய் வரும் பெண்கள் மிகவும் அவஸ்தை படுவார்களே. அவர்களின் மாதவிடாய் கழிவிலிருந்து வரும் நாற்றம் விலங்குகளை வசப்படுத்திவிடும். இதனாலேயே அந்த கோவிலுக்குள் பெண்கள் வரவேண்டாம் என சொல்லப்பட்டிருந்தது. இதுவே நாளடைவில் ஐதீகமாக கருதப்பட்டு வருகிறது என்று விளக்கம் தெரிவிக்கின்றனர் இந்த கோவிலுக்குள் பெண்களை அனுமதிக்க கோரி போராடுபவர்கள். நீங்களே சொல்லுங்கள்.. மாதவிடாய் நாட்கள் தவிர்த்து மற்ற நாட்களில் பெண்களை அனுமதிக்கலாமா? இல்லை கூடவே கூடாதா?