ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் காவல்துறையினர்தான். வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு மீட்டதாக பொய் வழக்கைப் போட்டவர்களும் அவர்களே.
அவ்வாறானவர்களால் முற்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அப்பாவிகள். அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும்’இவ்வாறு கடும் தொனியில் நீதிமன்றில் சமர்ப்பணம் செய்தார் சிரேஸ்ட சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ்.
கோப்பாய் காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட ஆடியபாதம் வீதியில் இளைஞர் ஒருவரைத் தாக்கி காயம் விளைவித்தனர் என்ற குற்றச்சாட்டில் 4 இளைஞர்கள் கடந்த வாரம் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் குறித்த நால்வரும் நேற்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.
‘சந்தேகநபர்கள் நால்வரும் இளைஞர் ஒருவரை துரத்திச் சென்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க நினைத்த இளைஞன் கிணறு ஒன்றுக்குள் குதித்துள்ளார். கிணற்றுக்குள் வீழ்ந்த இளைஞன் மீது சந்தேகநபர்கள் நால்வரும் கற்களால் தாக்கினர்’ என தமக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கோப்பாய் காவல்துறையினர் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். சந்தேகநபர்கள் நால்வரும் யாழ்ப்பாணம் நீதிமன்றில் பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தப்பட்டனர்.
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான மூத்த சட்டத்தரணி முடியப்பு றெமிடியஸ் மன்றில் பிணை விண்ணப்பம் செய்தார். ‘ஆவா குழு என்ற ஒன்றை உருவாக்கியது கோப்பாய் காவல்துறையினர்தான். இளைஞர்களுக்கு இடையிலான மோதலை வைத்து அவர்களை ஆவா குழு என அடையாளப்படுத்தி இன்று அது பெரும் வன்முறைகளுக்கு வழிவகுத்துள்ளது.
வாழையே இல்லாத தோட்டத்தில் கைக்குண்டு ஒன்றை வைத்துவிட்டு வாழைத் தோட்டத்தில் கைக்குண்டு மீட்டதாக பொய் வழக்கைப் போட்டவர்களும் கோப்பாய் காவல்துறையினர்தான். அவ்வாறானவர்களால் முற்படுத்தப்பட்டுள்ள சந்தேகநபர்கள் அப்பாவிகள். அவர்களைப் பிணையில் விடுவிக்கவேண்டும்’ என்று சட்டத்தரணி விண்ணப்பம் செய்தார். வழக்கை ஆராய்ந்த பதில் நீதிவான், பிரதான நீதிவான் முன்னிலையில் பிணை விண்ணப்பத்தை முன்வைக்குமாறு தெரிவித்து சந்தேகநபர்களின் விளக்கமறியலை வரும் 25ஆம் திகதிவரை நீடித்து உத்தரவிட்டார்.