வவுனியா மாவட்டத்தில் பூம்புகார் பிரதேசத்தில் உள்ள வைராமூன்றுமுறிப்பு குளம் உடைப்பெடுக்கும் நிலமை ஏற்பட்டுள்ளது. இரண்டு இடங்களில் ஏற்பட்ட வெடிப்புக் காரணமாக 2 அடி நீர் வெளியேறியுள்ளது. இதனையடுத்து அவசர அவசரமாக அதனை மறுசீரமைக்கும் பணி முழுவீச்சாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் மூன்று நாள்களாகத் தொடரும் மழையை அடுத்து குளத்துக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நிலையில் குளத்தின் அணைக்கட்டுப் பகுதியில் இருந்து நீர்க் கசிவு ஏற்பட்டு அணைக்கட்டு உடைப்பெடுக்கும் அபாயம் காணப்பட்டது.
மாவட்டச் செயலரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் , கமநல சேவைத் திணைக்கள அதிகாரிகள் குளத்தை நேரில் ஆராய்ந்தனர்.
உடனடியாக தடுப்புப் பணிகளை முன்னெடுக்க வேண்டிய அவசிய நிலமை காணப்பட்டமையில். கமநல சேவைத் திணைக்களம் மற்றும் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவின் உதவியுடன் 4 ஆயிரம் வெற்றுப் பைகளில் மண் நிரப்பி அணைக்கட்டைப் பாதுகாக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.இந்தப் பணியில் அந்தப் பகுதி மக்கள் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டனர்.