ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவனெல்லை தொகுதி இணை அமைப்பாளர் மொஹமட் இம்தியாஸ் காதர் துப்பாக்கிகள் சிலவற்றுடன் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் இன்று காலை கைது செய்யப்பட்டார்.
பொலிஸ் மா அதிபருக்கு கிடைத்த பிரத்தியேக தகவலுக்கு அமைய, சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
கைது செய்யப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மாவனெல்லை தொகுதி இணை அமைப்பாளர் மொஹமட் இம்தியாஸ் காதர் மேலதிக விசாரணைகளுக்காக திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாக திட்டமிட்ட குற்றச்செயல் தடுப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
அனுமதிப்பத்திரம் இல்லாமல் மூன்று துப்பாக்கிகள் மற்றும் ரவைகளை வைத்திருந்தபோது இன்று முற்பகல் சந்தேகநபர் அவரது வீட்டில் கைது செய்யப்பட்டார்.
கேகாலை ஆஷ்லி பீரிஸ் மாவத்தையில் பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்ட தேடுதலின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.
இதன்போது MP5K ரக துப்பாக்கியொன்றும், T56 ரக துப்பாக்கியொன்றும் ரிப்பீட்டர் ரக துப்பாக்கியொன்றும் கண்டுபிடிக்கப்பட்டன.
9mm ரக துப்பாக்கி ரவைகளும் T56 ரக துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படுகின்ற 33 ரவைகளும் ரிப்பீட்டர் ரக துப்பாக்கிகளுக்கான 17 ரவைகளும், மேலும் 11 தோட்டாக்களும் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
சந்தேகநபர் துப்பாக்கிகளை வைத்திருந்தமைக்கான காரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நடத்துமாறு பொலிஸ் மா அதிபர் பரிந்துரை செய்துள்ளார்.
துப்பாக்கி வைத்திருந்தமை தொடர்பில் பிறிதொரு வழக்கும் சந்தேகநபருக்கு எதிராக நிலுவையில் உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர் இன்று கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.