அவுஸ்ரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன், தமது நாட்டுக்கு விஜயம் செய்துள்ள பிரித்தானிய அரச தம்பதியரான ஹரி மற்றும் மேகன் மெர்க்கலை உத்தியோகபூர்வமாக வரவேற்றுள்ளார். தலைநகர் சிட்னியின் கிரிப்பில்லி மாளிகையில் இன்று (வௌ்ளிக்கிழமை) இந்த வரவேற்பு நிகழ்வு இடம்பெற்றது.
விசேட விருந்தினர் புத்தகத்தில் கையெழுத்திட்ட இளவரசர் மற்றும் மேகன் இருவரும் பிரதமரின் சிட்னி உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று பிரதமர் ஸ்கொட் மொரிசனுடன் கலந்துரையாடியுள்ளனர். அதேவேளை, அவுஸ்ரேலியாவின் எதிர்கட்சியான தொழிற்கட்சி தலைவர் பில் ஷோடன் மற்றும் அவரது பாரியார் க்லோய் ஷோடன் ஆகியோரையும் கடற்படை நிர்வாக இல்லத்தில் சந்தித்தனர்.
அரச தம்பதியை வரவேற்பதற்காக பாரிய அளவில் பொதுமக்கள் வீதியில் இருமருங்கிலும் கூடியிருந்து கொடிகளையும், கைகளையும் அசைத்து மகிழ்ச்சி வௌியிட்டனர்.
எதிர்வரும் வடக்கு வசந்தகாலத்தில் தமது முதல் மகப்பேற்றை எதிர்பார்த்திருக்கும் தம்பதிகள் கடந்த வாரம் முழுவதும் அவுஸ்ரேலியாவின் பல பாகங்களுக்கும் சென்று பல நிகழ்வுகளிலும் கலந்து கொண்டனர். இவர்களின் குழந்தை பிரித்தானிய சிம்மாசனத்தில் ஏழாவது வரிசை வாரிசாக இருக்கும்.
இந்தநிலையில், நாளை (சனிக்கிழமை) தொடக்கம் எதிர்வரும் 27 ஆம் திகதி வரை சிட்னியில் நடைபெறும் இன்விக்டஸ் விளையாட்டுகளுடன் அவர்களின் பயணம் நிறைவு பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் ஹரியினால் நிறுவப்பட்ட விளையாட்டு அமைப்புகளின் ஊடாக, மோதல்களின் போது காயமடைந்த இராணுவ அதிகாரிகளுக்கு சர்வதேச பாராலிம்பிக்-பாணியில் நடத்தப்படும் நிகழ்வாக இது திகழ்கிறது.