வங்கிப் பணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்கே இருக்கிறது. இது வரை எந்த வங்கிப் பணிப்பாளர் சபையும் கலைக்கப்படவில்லை என கண்டி நகர அபிவிருத்தி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இலங்கை வங்கி, மக்கள் வங்கி, முதலீட்டு சபை என்பவற்றின் பணிப்பாளர் சபைகளை கடந்த 17 ஆம் திகதி நள்ளிரவுடன் அமுலுக்கு வரும் வகையில் கலைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவை மேற்கோள்காட்டி பெரும்பாலான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதி முறைகேடுகள் குறித்து தனித்தனியாக விசாரணை நடாத்தப்பட எதுவாக சபைகள் கலைக்கப்படுவதாக கூறப்பட்டிருந்தது.
ஊடகங்களில் வெளியான செய்தி தவறானது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல , பணிப்பாளர் சபையை கலைக்கும் அதிகாரம் சம்பந்தப்பட்ட அமைச்சருக்குத் தான் இருக்கிறது. இரு பணிப்பாளர் சபைகளையும் மீளமைக்குமாறு ஜனாதிபதி என்னிடம் எழுத்து மூலம் கேட்டிருந்தார். ஆனால், இரு பணிப்பாளர் சபைகளும் இதுவரையில் கலைக்கப்படவில்லை என கூறியுள்ளார்.