மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை கட்டளை அதிகாரி ஒரு போர்க்குற்றம்சாட்டப்படும் ஒருவர் என்றும், அவரை உடனடியாக நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
இலங்கை உள்நாட்டுப் போரில், போர்க்குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டதை அடுத்து, லெப்.கேணல் கலன பிரியங்கார லங்காமித்ர அமுனுபுரேவை, உடனடியாக திருப்பி அழைக்குமாறு ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், இலங்கை அரசாங்கத்திடம், கோரியுள்ளார் எனவும் அவர் கூறினார்.
“அவரது மனித உரிமை பதிவுகள் பற்றிய அண்மைய தகவல்கள் ஆய்வு செய்யப்பட்ட பின்னர், ஐ.நா இந்த முடிவை எடுத்துள்ளது.
மாலியில் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றுவதற்கு செல்ல முன்னர், இவரது மனித உரிமை பதிவுகள் ஐ.நாவினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்டன. அண்மையில் புதிதாக கிடைத்த தகவல்களின் விளைவாகவே ஐ.நா இந்த முடிவை எடுத்துள்ளது.
குறித்த இராணுவத் தளபதி ஏற்கனவே நாடு திரும்பாவிடின், அவர் மிகவிரைவில் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவார். கூடிய விரைவில், லெப்.கேணல் அமுனுபுரேவுக்குப் பதிலான அதிகாரியை நியமிக்குமாறு இலங்கையிடம் ஐ.நா கேட்டுள்ளது.” என்றும் அவர் கூறினார்.
மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில், 200 பேர் கொண்ட இலங்கை இராணுவ அணியொன்று ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றி வருகிறது. எனினும், லெப்.கேணல் அமுனுபுரே மீதான போர்க்குற்றச்சாட்டு தொடர்பான விபரங்கள் எதையும், ஐ.நா பேச்சாளர் வெளியிடவில்லை.
மாலியில் உள்ள- பெயர் வெளியிடப்படாத- இலங்கை இராணுவ அதிகாரி ஒருவர், இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றங்களை இழைத்தார் என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக கடந்த ஜூலை மாதம் தி கார்டியன் நாளிதழ், செய்தி வெளியிட்டிருந்தது.
தென்னாபிரிக்காவைத் தளமாக கொண்ட யஸ்மின் சூகாவை தலைவராக கொண்ட அனைத்துலக உண்மை மற்றும் நீதி திட்டம், ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் இலங்கை படையினர் தொடர்பாக அந்த அறிக்கையில் தகவல்களை வெளியிட்டிருந்தது.