வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தவரிடம் நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த பெண்ணை ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவை பருத்தித்துறை நீதிவான் நளினி சுபாகரன் நேற்று முன்தினம் பிறப்பித்துள்ளார். மேலும் இந்த வழக்கை 29 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
வெளிநாட்டில் இருந்து இலங்கைக்கு வந்திருந்த மருதங்கேணி தாளையடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு குறித்த பெண் தொலைபேசி மூலம் அறிமுகமாகியுள்ளார்.
அப்போது குறித்த நபரை சந்திக்க வேண்டும் எனக்கூறி கொடிகாமத்திற்கு வரவழைத்துள்ளார். கொடிகாமம் வந்த போது “உங்களுக்காக காத்திருந்து விட்டு இப்போது தான் கிளிநொச்சிக்கு வந்தேன் அங்கு வருமாறு” கூறியுள்ளார்.
அந்த பெண் கூறிய இடத்திற்கு குறித்த நபர் வந்துள்ளார். இதன் போது இரண்டு ஆண்கள் மூலம் குறித்த நபரை யாரும் இல்லாத இடத்தில் வைத்து அச்சுறுத்தி நகை மற்றும் பணம் என்பவற்றை அப்பெண் அபகரித்துச் சென்றுள்ளார்.
குறித்த பெண்ணை நம்பி வந்த வெளிநாட்டு நபர் எல்லாவற்றையும் இழந்த நிலையில் கடைசியில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த தொலைபேசி இலக்கத்தின் மூலம் விசாரணைகளை நெல்லியடி பொலிசார் ஆரம்பித்தனர்.
வரணி வடக்கு பகுதியைச் சேர்ந்த பெண்ணையும் அவருடன் சேர்த்து மேலும் ஒருவரையும் புதன்கிழமை கைது செய்தனர்.
இவர்களை வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றில் முற்படுத்திய போது வழக்கை விசாரித்த நீதிவான் பெண்ணை பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.
இந்த கூட்டுக் கொள்கைக்கு உடன்பட்ட வரணி வடக்கு பகுதியைச் சேர்ந்த மற்றைய நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
அத்துடன் குறித்த பெண்ணின் கணவனையும் கைது செய்ய நெல்லியடி பொலிசாருக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.