இரண்டு ஆளும் கட்சிகளுக்கு இடையில் ஏதாவது கருத்து முரண்பாடு ஏற்பட்டால், சிலர் அரசாங்கத்தின் இறுதி காலம் வந்து விட்டதாக கருத்து வெளியிடுவதாகவும், புதிய அரசாங்கத்தை அமைக்க முயற்சிப்பதாகவும் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னேற்றவே தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. நாட்டையும், கிராமத்தையும் முன்னேற்றுவதாக வழங்கிய உறுதிமொழியுடன் தான் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தலாவ பிரதேச செயலாளர் பிரிவில் பயின்டிகுளம் பகுதியில் உள்ள வீதியை புனரமைக்கும் செயற்பாடுகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் கூறுகையில், இரண்டு பிரதான கட்சிகள் இணைந்து அரசாங்கம் ஒன்றை முன்னெடுக்கும் போது சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும். அதனை கலந்துரையாடல்கள் மூலம் சீர்செய்ய முடியும்.
சிலர் நினைப்பது போல் அரசாங்கம் கவிழ்ந்து விடாது. கடந்த அரசாங்கத்தில் தனக்கிருந்த சகல சிறப்புரிமைகளையும் கைவிட்டு, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசாங்கத்தில் இருந்து வெளியேறியதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.