இரு நாடுகளினதும் இணக்கப்பாட்டுடன் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இலங்கை அரசாங்கம் தாமதப்படுத்தி வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
இந்திய தலைநகர் புதுடெல்லியில் நேற்று(சனிக்கிழமை) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போதே, இந்தியப் பிரதமர் தமது அதிருப்தியையும் கவலையையும் வெளியிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், செய்து கொள்ளப்பட்ட பொருளாதார ஒத்துழைப்பு புரிந்துணர்வு உடன்பாட்டை நடைமுறைப்படுத்துவதில் இலங்கை காட்டி வரும் தாமதம் குறித்தே இந்தியப் பிரதமர் தீவிர ஏமாற்றத்தை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இராஜதந்திர விவகாரங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் பெரும் பகுதியை, இலங்கை விவகாரங்களுக்காகவே தாம் செலவழித்துள்ளதாகவும் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உதவி தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடு தமக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தன்னைக் குறித்தோ, இந்திய அரசாங்கம் குறித்தோ ஏதேனும் கரிசனைகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால் அதுதொடர்பில் தயக்கமின்றி கலந்துரையாடுமாறும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இந்தியப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்போது, இந்தியப் பிரதமர் மோடி மீதோ அவரது அரசாங்கத்தின் மீதோ- தாமோ அல்லது இலங்கையர்களோ, எந்தச் சந்தேகத்தையும் அல்லது பிரச்சினையையும் கொண்டிருக்கவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளித்துள்ளார்
அத்துடன், ஏதேனும் தவறான புரிதலை ஏற்படுத்தியிருந்தால் அதற்காக இந்தியப் பிரதமரிடம் மன்னிப்பைக் கோருவதாகவும், ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.