என்னை அண்ணார்ந்து பார்க்க வைத்த ’உயர்ந்த மனிதி’ “தர்ஜினி சிவலிங்கம்”
உயரம் மட்டும் காரணமல்ல. அவர் அடைந்த உயரங்களும் காரணம்.
வடக்கின் புன்னாலைக்கட்டுவன் மண்ணில் பிறந்த அதிசயப் பெண்.
இளம்பருவத்தில் பலரது பரிகசிப்புக்குள்ளாக்க வைத்த, இவரது உயரமே இன்று ‘வலைப்பந்தாட்ட விளையாட்டுத்துறையில்’ உலகிலேயே உயர்ந்த பெண் என வியந்து பாராட்டும் அளவுக்கு உயர்த்தியுள்ளது.
மேலும், 2009 ம். ஆண்டு ஆசிய மட்டத்தில் நடந்த போட்டித்தொடரில் இலங்கை வலைப்பந்தாட்டக் குழு Championships பட்டத்தை வெல்ல முழுப்பங்காற்றியவர். 2012-2014 ம் ஆண்டுகளிலும் இலங்கைக்கு வெற்றிக்கிண்ணத்தைப் பெற்றுத்தரக் காரணமானவர்.
அத்துடன் இரு ஆண்டுகளிலும் ஆசிய மட்டத்தில் ‘Best Shooter’ விருது வென்றவர். 2011 ம் ஆண்டு சர்வதேசப்போட்டிகளில் ‘உலகிலேயே சிறந்த ‘Best Shooter’ விருதினையும் வென்றவர். 2018ம் ஆண்டு Asian Netball Championships விருதினையும் இலங்கைக்கு வென்றுதரக் காரணமானவர். இன்று இலங்கை வலைப்பந்தாட்டக் குழுவுக்கே ‘தலைவி’யாக அங்கீகாரம் பெற்றுள்ளார்.
கிழக்குப் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் மற்றும் கலை என இரு துறைகளிலும் பட்டம் பெற்றவர். Australian City West Falcons netball club ல் பயிற்சியும் பெற்று அக்குழுவுக்காக பல போட்டிகளில் விளையாடி, வெளிநாட்டு வலைப்பந்தாட்டக்குழுவில் இடம்பெற்ற ஒரே இலங்கையின் விளையாட்டு வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றவர்.
மேலும், வங்கித்துறையில் பணியாற்றிக்கெண்டே விளையாட்டுத்துறையிலும் சாதனைகள் புரிந்து, தமிழினத்தைத் தலைநிமிரவைத்த இந்த சகோதரிக்கும் எனக்கும் தனியார் தெலைக்காட்சி ஒன்றின் 20வது அகவை விழாவில் விருதுகள் வழங்கி பெருமைப்படுத்தினார்கள். (அந்த வேளையில் தான் சிறுவயதுமுதலே எனது ரசிகை எனப் பரவசத்துடன் அவர் சொன்னபோது, எனக்கு இன்னுமொரு விருது கிடைத்த உணர்வும் மகிழ்ச்சியும் உண்டானது.)