வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரனை தெரிவு செய்தது நாங்கள் செய்த பாவம் என்றும், அந்தப் பாவத்தை கடந்த 5 ஆண்டுகளாக அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்றும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை.சோ.சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில், நில அதிகாரமும் அதிகாரப் பகிர்வும் என்ற சிறப்பு பேருரை ஒட்டுசுட்டான் சிவன் கோவிலில் நேற்று மாலை இடம்பெற்றது. இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், திருமதி சாந்தி சிறிஸ்கந்தராசா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா தெரிவிக்கையில் தமிழர்களின் பிரச்சினை தொடர்ந்து கொண்டே செல்கின்றது. நாங்கள் பேசிக்கொண்டு இருக்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விக்னேஸ்வரன் காரசாரமாகக் கண்டிக்கின்றார்.
நாங்கள் விரைவில் பதிலடி கொடுப்போம். கஜேந்திரகுமாரும் நீதியரசர் விக்னேஸ்வரனும் என்ன சொன்னார்கள்.
இந்த இடைக்கால அறிக்கையினை நிராகரியுங்கள் என்று சொன்னார்கள். ஏன் அப்படி சொன்னார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் இந்த பிரச்சினைக்குத் தீர்வு காண்டுவிடக்கூடாது என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னார்கள்.
பேரனும் சொல்கிறார் அடுத்த பேரனும் சொல்கிறார். அத்தோடு இப்போது ஒரு நீதியரசரும் சொல்கிறார். அவர் இப்போது நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்காகக் காத்திருக்கின்றார். அவர் பெரிய நீதியரசர் என்று சொல்லுகின்றார்.
நாங்கள் இப்போது பொறுமையாக இருக்கின்றோம். சிறிது காலத்தில் அவர் பற்றிய அரசியல் விடயங்களையும் ஒழுங்காகச் சொல்லுவோம்.
இடைக்கால அறிக்கை முடிந்த முடிவு அல்ல. இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு அது முழுமையானது அல்ல. அதில் சில இணக்கமானவைகள் இருக்கின்றன. இணங்க முடியாதவைகள் திருத்தி அமைக்க வேண்டும். இணக்கம் இல்லாது விட்டால் அது எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகத்தான் இருக்கும்.
இந்த ஆண்டுக்குள் புதிய அரசமைப்பு, நிலங்கள் விடுவிப்பது, கைதிகளின் விடயம் இவ்வாறு பல விடயங்களுக்கு தீர்வு காணப்பட வேண்டும்.
நிலம் எங்களுக்கு எவ்வளவு முக்கியமானது. நிலத்தை இழந்துவிட்டு தமிழீழ குடியரசாக இருந்தாலும் எங்கே நாங்கள் ஆளப்போகின்றோம்.
இந்த அரசும் எங்களுடைய பிரச்சனைக்கு தீர்வு தரவில்லை என்றால் அடுத்த கட்டம் என்ன? யாராவது கதைக்கின்றார்களா அதைப்பற்றி? ஆக சம்பந்தனை பற்றி, சுமந்திரனை பற்றி, என்னை பற்றி கதைக்கிறார்கள். எங்கள் தலைமையினை மாற்ற வேண்டும் அதுதான் முக்கியம்.
எங்கள் தலைமையினை மாற்ற வேண்டும், ஒரு புதிய தலைமையினை கொண்டு வர வேண்டும் என்று ஆளாளாக அடிபட்டுத் திரிகின்றார்கள்.
அது அல்ல இப்போது எங்களின் பிரச்சினை. இந்த அரசும் எங்களை ஏமாற்றுமாக இருந்தால் இந்த ஆண்டின் இறுதியில் சில முக்கியமான தீர்மானங்களை எடுக்க வேண்டி இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.