சென்னை, அக்.20: சென்னையில் கோவை எக்ஸ்பிரஸ், மன்னார்குடி வாராந்திர ரெயில் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. கோவை எக்ஸ்பிரசில் வெடிகுண்டு இருப்பதாக கூறிய நபரை உடனடியாக போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஜோத்பூரில் இருந்து மன்னார்குடி வரை செல்லும் வாராந்திர எக்ஸ்பிரசில் வெடிகுண்டு இருப்பதாக நேற்றிரவு சென்ட்ரல் ரெயில் நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு எஸ்எம்எஸ் வந்தது. இதையடுத்து எழும்பூருக்கு வந்து கொண்டிருந்த இந்த ரெயிலை இன்று காலை எண்ணூரிலேயே போலீசார் நிறுத்தி பயணிகளை இறக்கி விட்டு சோதனை நடத்தினார்கள். இதில் வெடிகுண்டு எதுவும் சிக்காததால் மீண்டும் பயணிகளுடன் மிகவும் தாமதமாக எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு மன்னார் குடி வாராந்திர எக்ஸ்பிரஸ் வந்து சேர்ந்தது.
இந்த மிரட்டலை அடுத்து இன்று மதியம் எழும்பூரிலிருந்து மன்னார்குடிக்கு செல்லும் ரெயிலிலும் போலீசார் அங்குலம் அங்குலமாக போலீசார் மோப்ப நாயுடன் சோதனை நடத்தினார்கள். இதற்கிடையே இன்று காலை 6.00 மணியளவில் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் அழைப்பில் கோவை எக்ஸ்பிரஸ் ரெயிலில் வெடிகுண்டு வைத்திருப்பதாக 2 பேர் பேசி கொண்டிருந்ததை நான் கேட்டேன் என கூறி விட்டு ஒருவர் இணைப்பை துண்டித்து விட்டார்.
இது குறித்து உடனடியாக அந்த எண்ணுடன் போலீசார் தொடர்பு கொண்டனர். அதில் பேசியவர், எனது பிறந்தநாளையொட்டி எனது நண்பர்கள் தவறான தகவலை தெரிவித்து விட்டார்கள். அதற்காக மன்னியுங்கள் என்று கூறினார்.
விசாரணையில் அவரது பெயர் நவீன்குமார் (வயது 25) என்றும் வடபழனியில் சிவன் கோயிலுக்கு பின்புறத்தில் வசிப்பவர் என்பது தெரிய வந்தது. இது பற்றி வடபழனி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட நபரை உடனடியாக விசாரணைக்காக அழைத்து வந்தனர்.
வடபழனி போலீஸ்நிலையத்தில் வைத்து அவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது. போலீசிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், தனது சொந்த ஊர் காட்பாடி என்றும், கோவை எக்ஸ்பிரசில் செல்வதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், புறப்படுவதற்கு தாமதமானதால் வெடிகுண்டு இருக்கிறது என கூறி ரெயிலை நிறுத்தி வைக்க முயற்சித்ததாகவும் கூறி உள்ளார். எம்பிஏ படித்த இவர், கோடம்பாக்கத்தில் தங்கி இருந்து வேலை தேடி வந்ததாகவும் கூறப்படுகிறது.