உச்ச நீதிமன்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பையடுத்து, கேரளாவில் ஜயப்பன் கோயிலில் அனைத்து வயது பெண்களுக்கும் முதல்முறையாக நடை திறக்கப்பட்டது. எனினும், வன்முறையில் ஈடுபட்ட போராட்டக்காரர்களால் இதுவரை எந்த பெண்ணும் கோயிலுக்குள் நுழையவில்லை.
செய்தியாளர் பவிதா ஜக்தல் மற்றும் செயற்பாட்டாளர் ரெஹானா ஃபாத்திமா ஆகிய இருவரும் வியாழக்கிழமையன்று சன்னிதானத்திற்குள் நுழைய முற்பட்டனர். 5 கிலோ மீட்டர் நடந்து அங்கு அவர்கள் செல்ல, நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு அளித்தனர்.
சன்னிதானத்திற்கு அருகில் சென்றதும் பக்தர்களுடன் ஏற்பட்ட மோதலால் அவர்கள் திரும்பி வரும் சூழல் ஏற்பட்டது.
போராட்டக்காரர்களில் பல பெண்களும் அடங்குவர். மாதவிடாய் காலகட்டத்தில் உள்ள 10 முதல் 50 வயதுள்ள பெண்கள் கோயிலுக்குள் நுழைய முயற்சிக்கிறார்களா என்று இந்த பெண்கள் சாலையில் செல்லும் வாகனங்களில் சோதனை நடத்தினர்.
ஒவ்வொரு ஆண்டும், நாடு முழுவதிலும் இருந்து பல கோடி பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.
போராட்டக்காரர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்?
உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஐயப்ப சுவாமியின் விருப்பத்திற்கு எதிராக அமைந்துள்ளதாக இவர்கள் கருதுகின்றனர்.
மாதவிடாய் காலத்தில் பெண்கள் தூய்மையாக இல்லை என்றும், அதனால் அவர்கள் மத சடங்குகளில் பங்கேற்க கூடாது என்றும் இந்து மத கோட்பாடுகள் கருதுகின்றன.
பெரும்பாலான இந்து கோயில்களில் மாதவிடாய் அல்லாத பிற நாட்களில் பெண்கள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால், சபரிமலையில் அப்படி கிடையாது.
பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்காதது மாதவிடாய் என்ற காரணத்தால் மட்டுமல்ல, அது ஐயப்பனின் விருப்பம் தொடர்புடையதும்கூட என்று இந்து பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.
போராட்டக்காரர்கள் என்ன சொல்கிறார்கள்?
இந்த போராட்டங்களுக்கு முன்னணியில் செயல்படும் ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்தி வரும் ஆர்கனைசர் இதழில் கட்டுரை எழுதியுள்ள வினிதா மேனன் ”இந்து பெண் பக்தர்களின் மத்தியில் மகிழ்ச்சி எதுவும் காணப்படவில்லை. மாறாக அவர்கள் துயரத்தில் உள்ளார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இறைவனின் விருப்பப்படி கோயிலுக்குள் நுழைய பெண்கள் விருப்பப்படவில்லை என்று வினிதா மேனன் கூறுகிறார்.
நீதிமன்ற தீர்ப்பு அமல்படுத்தப்பட்டால் தாங்கள் கோயிலுக்குள் நுழையமாட்டோம் என சில ஆண் பக்தர்கள் கூறியுள்ளனர்.
பிபிசி இந்தி சேவைப்பிரிவை சேர்ந்த இம்ரான் குரேஷியிடம் பேசிய முருகன் என்ற பக்தர் கூறுகையில், ”கடந்த 30 ஆண்டுகளாக நாங்கள் இந்த கோயிலுக்கு வந்து செல்கிறோம். ஆனால், எங்கள் மத நம்பிக்கையை குலைக்கும் வகையில் பெண்கள் கோயிலுக்குள் வந்தால், ஒருவேளை இனி நாங்கள் கோயிலுக்கு வராமல் போகலாம்” என்றார்.
இந்த பிரச்சனை தொடர்பாக தீர்பளித்த 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இருந்த ஒரே பெண் நீதிபதியான இந்து மல்ஹோத்ரா, அமர்வின் பெரும்பான்மை தீர்ப்பில் இருந்து மாறுபட்டார்.
”ஆழ்ந்த மத நம்பிக்கைகள் மற்றும் சம்பிரதாயங்களில் நீதிமன்றம் தலையிடக்கூடாது” என அவர் தனது கருத்தை தெரிவித்தார்.
இந்த கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழைய பல தசாப்தங்களாக பெண்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், 2016-இல் கோயிலின் தலைவர் அளித்த ஒரு சர்ச்சைக்குரிய அறிக்கை போராட்டத்துக்கு ஒரு புதிய உத்வேகத்தை அளித்தது.
மாதவிடாய் இல்லாமல் சுத்தமாக இருக்கிறார்களா என்பதை அறிய ஒரு கருவி கண்டுபிடித்த பிறகுதான், பெண்களை அனுமதிப்பேன் என்று கோயிலின் தலைவர் ப்ரயர் கோபாலகிருஷ்ணன் கூறினார்.
அவரது அறிக்கையை சுட்டிக்காட்டி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவர்கள், இந்திய அரசியல் அமைப்பு வழங்கிய சமத்துவ உரிமையை கோயில் சடங்குகள் மறுக்கும் விதமாக உள்ளதாக தெரிவித்தனர்.
வரும் நாட்களில் மேலும் பல பெண்கள் கோயிலுக்குள் நுழைய முற்படும்போது, போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் இடையே மோதல்கள் அதிகரிக்கக்கூடும் என்று செய்தியாளர்கள் கூறுகின்றனர்.