வரதா பாயின் தொடர்பின் ஊடாக விடுதலைப்புலிகளும், புளொட்டும் ஆப்கானிஸ்தானில் இருந்து கொஞ்ச ஆயுதங்களை வாங்கியிருந்தன.
நூலைப்பிடித்து நகர்வதை போல, அந்த லிங்கின் மூலம் தென்கிழக்காசிய நாடுகளிற்கு அந்த இயக்கங்கள் வந்ததையும் குறிப்பிட்டிருந்தோம்.
ஆனால், மற்றைய இயக்கங்களான ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், ஈரோஸ் போன்றவை இந்திய புலனாய்வுத்துறை கொடுத்து ஆயுதங்களில் மட்டுமே தங்கியிருந்தன. மேற்கொண்டு முயற்சிகள் எடுக்கும் வல்லமை அவற்றிடம் இருக்கவில்லை.
வரதா பாயின் தொடர்பின் மூலம் கிடைத்த அறிமுகங்களுடன் 1984இல் குமரன் பத்மநாதன் (கே.பி) தாய்லாந்திற்கு சென்றுவிட்டார்.
இதே காலத்தில் புளொட்டும் வெளிநாட்டிலிருந்து கப்பல் மூலம் ஆயுதங்களை இறக்க முயற்சித்தது.
புளொட்டிற்கு அப்பொழுது இலண்டனில் நல்ல தொடர்பிருந்தது. மற்ற எல்லா இயக்கங்களைவிட பாலஸ்தீன விடுதலை இயக்கம், லெபனான் ஹிஸ்புல்லா அமைப்புக்களுடன் புளொட்டிற்கு நெருங்கிய தொடர்பிருந்தது.
ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பின் மகாஉத்தமன் லெபனானில் நல்ல தொடர்புகளுடன் இருந்தார். ஆனால், அந்த தொடர்பை அமைப்பிற்கு அதிகபட்ச அனுகூலமாக மாற்றுவது எப்படியென்பது மகாஉத்தமனிற்கோ, ஈ.பி.ஆர்.எல்.எவ் இற்கோ தெரியவில்லை. இந்த தொடர்புகளின் மூலம் அங்கு ஆயுதப்பயிற்சி பெற மட்டுமே அவர்களால் முடிந்தது.
இந்தக் காலப்பகுதியில் இந்தியாவில் தங்கியிருந்த உமாமகேஸ்வரன் கள்ள பாஸ்போர்ட்டில் பல தடவைகள் லெபனானிற்கு சென்று வந்தார்.
லெபனானில் தங்கியிருந்த பாலஸ்தீன விடுதலை இயக்கத்தினருடனான தொடர்புகளின் மூலம், ஒரு தொகை ஆயுதங்களை புளொட் வாங்கியது.
இதற்கான பணத்தை இலண்டனில் இருந்த புளொட் செயற்பாட்டாளர்கள் திரட்டிக் கொடுத்திருந்தார்கள்.
ஏ.கே துப்பாக்கிகள் 2000, ஆர்.பி.ஜி 200, பிஸ்டல் 50 என்பன வாங்கப்பட்டு, கப்பலில் ஏற்றப்பட்டு சிங்கப்பூரிற்கு வந்து, சிங்கப்பூரில் இருந்த இந்தியாவிற்கு கொண்டு வருவதே திட்டம்.
ஈழவிடுதலை இயக்கமொன்று முதன்முறையாக கப்பலில் ஆயுதம் இறக்கிய நிகழ்விது. புளொட்டின் உயர்மட்ட உறுப்பினர்கள் உமாமகேஸ்வரன் உள்ளிட்ட ஒரு சிலருக்கு மட்டுமே விடயம் தெரிந்திருந்தது.
ஆயுதம் என்பதை சுங்கப்பிரிவினர் கண்டுபிடிக்காமல் இருக்க, நுணுக்கமாக திட்டமிடப்பட்டிருந்தது.
ஆந்திராவில் உள்ள காகிதங்கள் மீள்சுழற்சி செய்யும் நிறுவனமொன்றிற்கு பழைய காகிதங்கள் கப்பல் மூலம் கொண்டு வரப்படுகிறதென்ற பெயரில் ஆயுதங்கள் கொண்டு வரப்பட்டன.
சென்னை துறைமுகத்திற்கு கப்பல் வந்து சேர்ந்ததும், அங்குள்ள சுங்க அதிகாரியொருவர் கொஞ்சம் இலஞ்சப் பணம் கேட்டிருக்கிறார்.
அவருக்கு தெரியாது கப்பலில் வந்தது ஆயுதங்கள் என்பது. பழைய காகிதங்கள்தான் வந்துள்ளதென்றே சுங்கப்பிரிவினர் நினைத்திருந்தனர். பணம் வரும்வரை சில காரணங்களை சொல்லி பொருட்களை விடுவிக்காமல் தடுத்துவிட்டார்.
சுங்கப்பிரிவினருக்கு இலஞ்சம் கொடுத்து பொருட்களை இறக்குவதில் உமா மகேஸ்வரனிற்கு உடன்பாடு இருக்கவில்லை.
சிலநாட்கள் பொறுத்தால் சுங்கப்பிரிவினர் விடுவித்து விடுவார்கள் என நினைத்தார். இந்த சிக்கல் பற்றி அவர் யாரிடமும் கலந்தாலோசிக்கவில்லை. உமாமகேஸ்வரனில் இருந்த பிரதான பிரச்சனையே இதுதான். கட்சி விடயங்களை கலந்தாலோசிக்க மாட்டார்.
பிரபாகரன், கே.பி. அன்ரன் பாலசிங்கம், சங்கர்
சென்னை துறைமுகத்தில் பொருட்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த சமயத்தில், சுங்கப்பிரிவு ஊழியர்கள் சிலர் எதேச்சையாக கப்பலில் இருப்பது என்னவென பரிசோதித்து பார்த்தனர். அவர்களிற்கு பேரதிர்ச்சி. அத்தனையும் ஆயுதங்கள்.
செய்தி பத்திரிகைகளிற்கு பரவி, இந்திய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. இறுதியில் மத்திய அரசே அந்த ஆயுதங்களை கையகப்படுத்தியது.
புளொட்டிற்கு பெரிய ஏமாற்றமாகி விட்டது. இவ்வளவு ஆயுதங்களையும் கொண்டு வந்தும், இறக்க முடியாமல் போய்விட்டதே என்ற கவலை அவர்கள் எல்லோரிடமும் இருந்தது.
இந்த ஆயுதங்கள் சிக்கலில்லாமல் புளொட்டின் கையில் கிடைத்திருந்தால், 1985 இல் நிலைமை வேறுவிதமாக மாறியிருக்கும்.
கொஞ்சம் பணத்தை இலஞ்சமாக கொடுக்காததால், மொத்த ஆயுதத்தையும் பறிகொடுத்தார்கள்!
இயக்களிற்கிடையில் மோதல் ஏற்பட்ட சமயத்தில் புலிகளின் கை ஓங்கியதற்கு இரண்டு காரணம். ஒன்று, புலிகள் முதலில் தாக்க ஆரம்பித்தது. இரண்டு, புலிகளிடம் இருந்த ஆயுதபலம். புளொட்டின் ஆயுதக்கப்பல் வெற்றிகரமாக பொருட்களை இறக்கியிருந்தால், சகோதர யுத்தத்தில் பேரழிவு ஏற்பட்டிருக்கும்.
இந்த ஆயுதங்களை மீளப்பெற புளொட் பலவழிகளிலும் முயன்றது. றோவின் அதிகாரிகளுடன் பேசினார்கள்.
மத்திய அரசுடன் பேசி, ஆயுதங்களை திரும்ப தர முயல்வதாக றோ அதிகாரிகள் வாக்களித்தனர். அதன்பின் மத்திய அரசுடன் பேசி, றோ அதிகாரிகள் வேறுவிதமாக செயற்பட்டார்கள்.
அந்த ஆயுதங்களை எல்லா இயக்கங்களிற்கும் பிரித்து கொடுத்தார்கள். ஈழ விடுதலை இயக்கங்களிற்கு இந்தியா கொடுத்த ஆயுதங்களின் பின்னணி இதுதான்!
ஈழவிடுதலை இயக்கங்களின் கடல்மார்க்க ஆயுத கொள்வனவு முயற்சியில் முதலாவதாக நடந்த சம்பவம் இதுதான் . இதன்பின் புளொட் இப்படியான முயற்சிக்கு துணியவில்லை.
புளொட்டின் வீழ்ச்சிக்கும் இந்த இயல்பும் ஒரு காரணமாக இருக்கலா். இயக்க மோதல்கள் உள்ளிட்ட பல காரணங்களால் புளொட்டால் தனித்துவமாக சிந்திக்கவும் முடியாமல் போய்விட்டது.
ஆனால் இதன் பின்னர்தான் புலிகளின் ஆட்டம் ஆரம்பித்தது. தாய்லாந்திற்கு போன கே.பி அங்குள்ள முகவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி, ஆயுதங்களை கொள்வனவு செய்தார்.
புலிகளின் முதலாவது ஆயுதக் கப்பல் 1985இன் தொடக்கத்தில் சென்னை துறைமுகத்திற்கு வந்தது. கச்சிதமாக அவை இறக்கப்பட்டு புலிகளின் கைக்கு சேர்ந்தது.
ஆயுதக்கொள்வனவு, கறுப்புசந்தை பணம் விழுங்கும், காய்க்கும் இடம். சாதாரண விடுதலை அமைப்புக்களால் ஈடுகொடுக்க முடியாது.
புலிகள் தவிர்ந்த மற்றைய இயக்கங்கள் இதில் அவ்வளவாக ஈடுபடாதது இதனால்தான். ஒரு சூதாட்டத்தை போன்றது ஆயுத கொள்வனவு. ஒரு முகவரை நம்பி பணம் கொடுத்தால், சில சமயம் ஆயுதம் வரும்.
சில சமயம் ஆளை காணமுடியாது. தலைமறைவாகி விடுவார். மலைவிழுங்கிகள்தான் இந்த தொழிலில் ஈடுபடுவார்கள். எவ்வளவுதான் சமார்த்தியசாலியென்ற போதும், அடிக்கடி காசை இழக்க வேண்டிவரும். அதற்கு சில உதாரணங்களை சொல்கிறோம்.
1998இல் புதுக்குடியிருப்பிற்கு அண்மையில் ஆழஊடுருவும் படையணியின் கிளைமோர் தாக்குதலில் மரணமானவர் கேணல் சங்கர். புலிகளின் விமானப்படை தளபதியாக இருந்தவர்.
அவரது போராளிகள் பலர் வெளிநாடுகளில் தங்கியிருந்து விமானப்பயிற்சி பெற்றனர். இப்படியான சந்தர்ப்பமொன்றின் மூலம் ஆயுத முகவர் ஒருவரின் தொடர்பு சங்கரிற்கு ஏற்பட்டது. இது 1990களின் முற்பகுதியில் நடந்தது. ஆயுத முகவர் அல்ஜீரிய பிரஜை.
சிறிய ரக விமானம், விமான எதிர்ப்பு ஆயுதங்கள் வாங்கித் தருவதாக வாக்களித்திருந்தார். அவர் ஒரு எமகாதகன். சங்கருக்கோ, சங்கரின் போராளிகளிற்கோ இது தெரியாது. அல்ஜீரியன் பேசியதை அப்படியே நம்பினார்கள்.
இந்த ஆயுதபேரத்தை முழுவதும் சங்கரே செய்தார். சங்கரின் ஆட்கள் ஆயுதங்களை வாங்கி கே.பியின் குறூப்பிடம் ஒப்படைப்பது, கே.பி குறூப் முல்லைத்தீவிற்கு அண்மையாக கடற்புலிகளிடம் கையளிப்பது. இதுதான் திட்டம்.
குறிப்பிட்ட தினமொன்றில் கே.பிக்கு அறிவிக்கப்பட்டது, சுயெஸ் கால்வாயில் கப்பலை கட்டி வைத்திருங்கள், அழைக்கும் போது உடனடியாக எகிப்திற்கு செல்லுங்கள் என. இதன்படி கே.பியின் அணியொன்று சுயெஸ் கால்வாயில் காத்திருந்தது. மூன்று, நான்கு நாட்கள் காத்திருந்தும் பலனில்லை. முகவரின் தொடர்பும் இல்லை. அவரிடம் அரைவாசி பணம் கொடுக்கப்பட்டு விட்டது. இதன் மீதி காசு இலண்டனில் ஒருவரிடம் கொடுத்து வைக்கப்பட்டிருந்தது.
1987 இல் நாவற்குழியில் நடந்த வெடிவிபத்தில் மரணமான கண்ணாடி வாசுவின் (கப்டன் வாசு) நெருங்கிய உறவினரான அவர்- இலண்டனில் இருக்கிறார்- மிகுதி பணத்தை புலிகள் கொடுத்து வைத்தனர்.
ஆயுதங்கள் கப்பலில் ஏற்றப்பட்டதும், அவர் காசை குறிப்பிட்ட ஒருவரிடம் ஒப்படைப்பதென்பது திட்டம்.
அவர் ஆயுத முகவரிடமும் பணத்தை கொடுக்கவில்லை. புலிகளிடமும் கொடுக்கவில்லை. கேட்டால், திருட்டு போய்விட்டதாக காரணம் கூறினார். வீட்டின் பின்பகுதி சுவரில் ஒரு ஓட்டையையும் காட்டி, “இந்தா.. இதற்குள்ளால்தான் கள்ளன் புகுந்து, பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்“ என்றார்.