அமைச்சரவையின் இரகசியங்களை வௌியிட்டதாக கூறப்படும் இரண்டு அமைச்சர்கள் யார் என்பதை அரசாங்கம் வௌிப்படுத்த வேண்டும் என கூட்டு எதிரணி கோரிக்கை விடுத்துள்ளது.
கூட்டு எதிரணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஸ தமது டுவிட்டர் வலைத்தளத்தின் ஊடாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
தம்மை கொலை செய்வதற்கு இந்தியாவின் “றோ“ உளவு அமைப்பு திட்டமிட்டதாக ஜனாதிபதி அமைச்சரவையில் கூறியதாக வௌிவந்த கருத்து பாரிய சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதனை அமைச்சரவையின் அமைச்சர்கள் நால்வரே தெரிவித்ததாக அந்த செய்தியை முதலில் வௌியிட்ட த ஹிந்து ஊடகம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில் அதனை வௌியிட்டவர்களின் இருவரின் பெயரை தாம் அறிவதாக அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்றைய தினம் குறிப்பிட்டிருந்தார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிடும் போதே நாமல் ராஜபக்ஸ மேற்கண்டவாறு கோரிக்கை விடுத்துள்ளார்.