தென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் எவ்வித தண்டனையோ அபராதமோ செலுத்தாமல் தமது நாடுகளுக்கு திரும்பி செல்வதற்காக மூன்று மாத கால பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதமாக தென் கொரியாவில் தங்கியிருக்கும் நிலையில் கைது செய்யப்படும் நபருக்கு மீண்டும் தென் கொரியாவுக்கு வர 10 ஆண்டுகள் தடைவிதிக்கப்படும்.
எனினும் தற்போது தென் கொரியாவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டவர்கள் தமது சுயவிருப்பத்தின் பேரில் நாட்டில் இருந்து வெளியேறினால் அவர்களுக்கு இந்த தடை அமுல்படுத்தப்பட மாட்டாது என தென் கொரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதனை தவிர தாம் வழமையாக தொழில் புரியும் இடங்களுக்கு மேலதிகமா தங்காலிமாக நிர்மாண துறைசார்ந்த தொழில்களில் சட்டவிரோதமாக எவராவது தொழில் புரிந்தால், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களுக்கு தென் கொரியாவில் தங்கியிருக்க வழங்கப்பட்டுள்ள வீசா அனுமதி இரத்துச் செய்யப்பட்டு உடனடியாக நாட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் எனவும் தென் கொரியாவில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.
அதேவேளை வழங்கப்பட்டுள்ள பொதுமன்னிப்பு காலத்தில் நாட்டை விட்டு வெளியேறாத வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு உடனடியாக அவர்களின் சொந்த நாட்டு அனுப்பி வைக்கப்படுவார் எனவும் அவர்கள் தென் கொரியாவுக்கு வர 10 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் எனவும் அந்நாடு அறிவித்துள்ளதாக இலங்கை தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, தென் கொரியாவில் அதிகளவான இலங்கை தொழிலாளர்கள் தொழில் புரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.